`என் தலைவனை முறைத்தான்; வெட்டினேன்'- போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ரவுடி மாடு தினேஷ்

ரவுடி மாடு தினேஷ்

`என்னோட தலைவனை கறிக்கடைக்காரர் ரமேஷ் முறைத்ததால் அவரை வெட்டினேன். ஆனால் அவர் இறக்கவில்லை'  என்று சென்னையைச் சேர்ந்த ரவுடி மாடு தினேஷ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரவுடிகளைப் பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புளியந்தோப்பு பகுதியில் தலைமறைவு ரவுடிகளைப் போலீஸார் பிடித்துச் சிறையில் அடைத்துவருகின்றனர். இந்த நிலையில், பிரபல ரவுடிகள் கதிர் என்கிற கதிர்வேலுக்கும் அப்பு என்கிற தினேஷுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்துவருகிறது. இவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி அப்பு தினேஷின் கூட்டாளியான மாடு தினேஷை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் மாடு தினேஷ். இவர், பிரபல ரவுடி அப்பு தினேஷின் கூட்டாளி. மாடு தினேஷ் மீது, கடந்த 2014-ல் திரு.வி.க.நகரைச் சேர்ந்த தேவாவைக் கொலை செய்ய முயன்றதாக வழக்கு உள்ளது. இதையடுத்து, கடந்த 2016-ல் செம்பியத்தைச் சேர்ந்த கறிக்கடைக்காரர் ரமேஷ் என்பவர் அப்பு தினேஷைப் பார்த்து முறைத்துள்ளார். இதற்காக ரமேஷை மாடு தினேஷ் வெட்டினார். அதுதொடர்பாக அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெரவள்ளூர் போலீஸார் மாடு தினேஷை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாடு தினேஷ், ரவுடியானதற்குப் பின்னணியில் ஒரு ஸ்டோரி உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

அதாவது, 9-ம் வகுப்பு வரை படித்த மாடு தினேஷ், அதற்கு மேல் படிக்காமல் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். 2013-ம் ஆண்டுதான் அப்பு என்கிற தினேஷின் அறிமுகம் மாடு தினேஷுக்கு கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அப்பு தினேஷின் கூட்டாளியாக இருந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர் போலீஸார். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாடு தினேஷ், குற்றச் செயல்களில் ஈடுபட்டவுடன் திருப்பதிக்குச் சென்று உறவினர்கள் வீடுகளில் தலைமறைவாக இருப்பார். அப்பு தினேஷைப் பிடிக்க நாங்கள் முயன்றபோது மாடு தினேஷ் தப்பிவிட்டார். எங்களின் நீண்ட தேடுதல் வேட்டையில்  மாடு தினேஷ் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரைப்பிடிக்க முயன்றோம். அப்போது அவர் தப்பி ஓடினார்.  நாங்கள் அவரை விரட்டினோம். அப்போது அவர் கீழே விழுந்ததில் அவரின் கை உடைந்தது. இதனால் அதற்கு சிகிச்சை அளித்து, சிறையில் அடைத்துள்ளோம்'' என்றார். 

 மாடு தினேஷ் என்று பெயர் வந்ததற்கு என்ன காரணம் என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, `தினேஷின் குடும்பம் மாடு பிடிக்கும் தொழிலைச் செய்துள்ளனர். இதனால் அவரின் அப்பாகூட மாடு என்ற அடைமொழியுடன்தான் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் தினேஷையும் மாடு தினேஷ் என்று அவரின் நண்பர்கள் அழைத்துள்ளனர்' என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!