வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (06/08/2018)

கடைசி தொடர்பு:14:48 (06/08/2018)

மதுரையில் இறந்த 43 மயில்கள்... ரியல் எஸ்டேட் வளர்ச்சி காரணமா?!

சுமார் 50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தோம். ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன.

மதுரையில் இறந்த 43 மயில்கள்... ரியல் எஸ்டேட் வளர்ச்சி காரணமா?!

மிழ்க் கடவுள் முருகனின் வாகனமான மயில் இந்தியத் தேசியப் பறவையாக இருந்து வருகிறது. மயில்கள் அழகான தோற்றத்தைக் கொண்டு இயற்கை ஓவியம் போல காட்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் சமீப காலங்களாக மயில்கள் மர்ம நபர்களால் விஷம் வைத்து கொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மதுரையில் 43 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனச்சரகப் பகுதிகளில் குளம், கண்மாய், அடர்ந்த மரங்கள், புதர்கள், மலைகள் என அதற்கான தகவமைப்பு உள்ள இடங்களில் ஏராளமான மயில்கள் வசித்துவருகின்றன. இவை கண்மாய் தூர்வாருதல், மரங்கள் வெட்டப்படுவதால் வாழிடம் அழிக்கப்பட்டு உணவு, தண்ணீர் கிடைக்காமல் இறக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, வாழிடம், தேடியும் உணவுக்காகவும், விளைநிலங்களுக்கு அருகில் வசிக்கத் தொடங்குகின்றன. இவ்வாறு விளைநிலங்களுக்குள் இரைதேடிச் செல்லும் மயில்கள், பயிர்களைச் சேதப்படுத்துவதாகக் கூறி பலரும் விஷம் வைத்துக் கொன்று குவித்துவருகின்றனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவில் மயில்கள் இனமே அழிந்து வரும் சூழல் உருவாகி உள்ளது. 

இந்தச் சம்பவம் குறித்து வனச்சரகர் ஆறுமுகம் கூறுகையில் ``சுமார் 50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்துகிடப்பதாக ஆறுமுகம்தகவல் வந்தது, இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தோம். ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன. அனைத்தையும் ஒருங்கிணைத்ததில் 34 பெண் மயில்களும், 9 ஆண் மயில்களும் என மொத்தம் 43 மயில்கள் இறந்து கிடந்தன. இவற்றை உடனடியாக உடற் பரிசோதனைக்காக தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அங்கு மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும். இங்குள்ள பகுதிகளில் சுமார் 2 கி.மீ பரப்புக்கு விளைநிலங்கள் இல்லை. ஆனாலும், ரியல் எஸ்டேட் பிசினஸ் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சிதறிக் கிடந்த நெற்பயிர்களையும் சோதனைக்கு எடுத்துள்ளோம். மயில்களுக்கு யாரேனும் நெற்பயிரில் விஷம் வைத்துக் கொன்றுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வன உயிரினச் சட்டம் 1972ன் படி மயில்களை வேட்டையாடுவது குற்றமாகும். மயில்கள் பாதுகாக்கப்பட்ட வன உயிரினமாகும். இச்சம்பவத்தில் யாரேனும் ஈடுபட்டு இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு சுமார் 3 ஆண்டுகள் முதல் 7ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை கிடைக்கும்" என்றார்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவி இச்சம்பவம் பற்றிக் கூறும்போது, `மதுரை வனச்சரகப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் வசித்து வருகின்றன. அதில் அழகர்கோயில் சாலை, சூர்யா நகர்ப் பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மயில்கள் வசிக்கின்றன. இங்குள்ள தென்னைமரங்கள்தாம் இவற்றிற்கு வாழிடம். இவை தோகை விரித்து ஆடினால் அவ்வளவு அருமையாக இருக்கும். இப்பகுதியில் நடைப்பயிற்சி செய்யும் போது பல நாள்கள் இதைக் கண்டு களித்திருக்கிறேன். ஆனால், இவை ஒரே நாளில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. நெற்பயிர்கள் அவித்து அதில் விஷ மருந்துகளையும் கலந்து கொன்றுள்ளனர். எனவே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை விரைவில் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது” எனத் தெரிவித்தார்.

மயில்கள்

மயில்கள் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் கோல்டன் சிட்டி தென்னந்தோப்புப் பகுதியில் வசித்துவரும் பொதுமக்களிடம் விசாரித்த போது ``இந்த மயில்கள் ஆடிப்பெருக்கு அன்றே இறந்து கிடந்துள்ளன. ஆனால், அப்பகுதியில் ஆடுமேய்க்கும் நபர்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. மறுநாள் மயில்கள் இறப்பால் துர்நாற்றம் வீசத்தொடங்கவும்தான் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட் இடங்கள் பல ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலங்களாக இருந்தன. அதனால் நிலத்தடி நீரும் அதிகமாக இருக்கும். இந்தக் காரணத்தால் ரியல் எஸ்டேட்டுகள் அதிகமாக வந்துவிட்டன. இதன் வளர்ச்சியால் இப்பகுதி உயிரினங்கள் அழிவுக்குத் தள்ளப்பட்டுவருகிறது. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட மயில்கள் பயங்கர ஓசை எழுப்பி வந்தன, மழைக்காலங்களில் அதிக சத்தமாக இருக்கும். இதனால் கூட சமூக விரோதிகள் இதைக் கொன்று இருக்கலாம். ஆனால், இதுதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அதிகாரிகள் இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

மயில்களைக் கொல்ல நெற்பயிர்களை அவிழ்த்து அதில் விஷம் கலந்து கொட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. மயில்களைக் கொல்ல இந்தத் தென்னந்தோப்பை சமூக விரோதிகள் குறிவைத்துள்ளனர். திட்டமிட்டே மயில்களைக் கொன்றுள்ளனர் என்பது உறுதியாகிறது. இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பகுதியில் மீதமுள்ள மயில்களையாவது காப்பாற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்