வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (06/08/2018)

கடைசி தொடர்பு:15:05 (06/08/2018)

வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய அரசு! - வைகோ சாடல்

இந்தியாவின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த முக்கிய அடையாளங்களை அழிப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு பெரும் முயற்சி எடுத்து வருவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

வைகோ

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், `` இந்தியாவின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த முக்கிய அடையாளங்களை அழிப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கு குழு ஒன்றை உருவாக்கியதோடு இல்லாமல், தற்போது ``தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா 2017-ஐ நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.பல்வேறு தேசிய இனங்கள் அவற்றுக்கே உரிய தனித் தன்மையுடன் இந்தியாவில் இருந்ததற்கான எண்ணிலடங்கா அடையாளங்கள் கோயில்களாகவும், மசூதிகளாகவும், சமாதிகளாகவும், சிலைகளாகவும், நினைவுத் தூண்களாகவும் உள்ளன. இவை அனைத்தையும் பாதுகாத்து ஆராய்ச்சி செய்வதன் மூலம் நமது பாரம்பர்யத்தை அறியவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் முடிகிறது.


இவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே 1904-ம் ஆண்டு பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினர். பின்னர் அதில் சில மாறுதல்கள் தேவைப்பட்டதால் 1958-ம் ஆண்டு ``தொன்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958)” இயற்றப்பட்டது. 

தமிழகத்தில் மட்டும் 413 தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழர்களின் நாகரிகமே தொன்மையானது என்பதற்கான ஆதாரமாக பல பொருள்கள் கிடைத்த கீழடி ஆராய்ச்சியை முடக்க மத்திய பா.ஜ.க. அரசு துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தச் சட்ட மசோதாவை இந்துத்துவத்துக்கு ஆதரவாகவே அரசு பயன்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இந்தப் புதிய மசோதா ஏற்கெனவே மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பை சந்தித்ததால் தெரிவு குழுவுக்கு (Select committee) அனுப்பப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்து, இரண்டாம் கூட்டம் ஆறாம் தேதியான இன்று நடக்கவுள்ளது. அதன்பின் மீண்டும் அவையில் வைக்கப்பட்டு நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. ஆகவே, இச்சட்ட மசோதாவை மதச்சார்பற்ற அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் ஒருபோதும் நமது வரலாற்றை அழிக்க நினைக்கும் முயற்சியை நிறைவேற்ற விடக் கூடாது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.