வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (06/08/2018)

கடைசி தொடர்பு:16:50 (06/08/2018)

``ஜெர்மனி, இஸ்ரேல், கேரளா செய்யாததை நம் மேல் திணித்தது திராவிடக் கட்சிகள்தாம்!” - `கள்’ நல்லசாமி

"நிலத்தடி நீரை அவசரக்காலத்துக்குக் கொஞ்சமாக ஊறுகாய் போல வேண்டுமானால் எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், உணவு போல 365 நாள்களும் நிலத்தடி நீரை உறிஞ்சுவது இயற்கைப் பேரிடர்களையே கொண்டு வந்து சேர்க்கும்."

``ஜெர்மனி, இஸ்ரேல், கேரளா செய்யாததை நம் மேல் திணித்தது திராவிடக் கட்சிகள்தாம்!” - `கள்’ நல்லசாமி

`காவிரி உள்ளிட்ட ஆறுகளின் உபரி நீர் கடலில் வீணாகக் கலக்கிறது' என்று காலங்காலமாகச் சொல்லப்படும் சொல்லாடலுக்கு எதிர்ப்பாக சிலர் சமூக வலைதளங்களில் எதிர்க்கருத்து பதிந்து வருகிறார்கள். `ஆற்று நீர் கடலுக்குப் போவதுதான் நியதி. அதுதான் இயற்கை சமன்பாடு. அதைத் தடுத்து நாம்தான் தவறு செய்கிறோம். கடலில் கலக்கும் நீரை வீண் என்று சொல்வது அபத்தம்' என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில்,``கடலுக்குப் போகும் தண்ணீரை வீண் என்று சொல்வது எப்படி இயற்கைக்கு எதிரான செயலோ, அதுபோல்தான் நிலத்தடி நீரை 500,1000,2000 அடிகள் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, உறிஞ்சி எடுப்பதும். இதனால் விரைவில் தமிழகம் எந்தத் தாவரமும் முளைக்காத பாலைவனமாகும். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு விவசாயிகளைப் பழக்கிய அரசாங்கம், அதற்கு இலவசமாக மும்முனை விவசாயம் வழங்குவது இன்னும் கொடுமை. இந்த நிலைமைக்குக் காரணம் விவசாயிகளின் மீதும், விவசாயத்தின் மீதும் அக்கறை இல்லாத திராவிடக் கட்சிகள்தாம்" என்று அதிரடியாகப் பேசுகிறார் கள் இயக்கத் தலைவர் 'கள்' நல்லசாமி.

ஒரு நிகழ்வுக்காக கரூர் வந்தவரை சந்தித்துப் பேசினோம். மனிதர் பேச்சில் காவிரியில் ஓடும் தண்ணீரின் சீற்றம். ``இயற்கையும், இயற்கைச் சூழலியாளர்களும் இப்படி நாம் கணக்கு வழக்கில்லாமல் பூமிக்குள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் செயலை ஊக்குவிக்கவில்லை. மகாத்மா காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்தவர் ஜே.சி.குமரப்பா. அவர் 1956 ம் ஆண்டு தமிழகத்துக்கு வருகை தந்தார். அப்போது, தமிழகத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை எடுக்கும் செயல்கள் நடைபெற்றது. அதைப் பார்த்த அவர், `இது இயற்கைச் சுழற்சிக்கு எதிரான செயல். அதாவது நிலத்துக்குள் இருக்கும் நீரைக் கொண்டு தாவரங்கள் வளரும். அந்தத் தாவரங்கள் மூலம் வெளிப்படும் காற்று மழைமேகங்களைக் கவரும். அதனால், மழை பெய்து ஆறுகளின் வழியாகக் கடலுக்கும், பூமிக்குள்ளும் மழைநீர் போகும். கடல் நீர் மேகமாகும். அந்த மழைமேகத்தை மறுபடியும் பொழிய வைக்க நிலத்தடி நீரைக் கொண்டு உயிர்வாழும் மரங்கள் மெனக்கெடும். இதுதான் இயற்கையின் சுழற்சி. ஆனால் இயற்கை சுழற்சி இங்கே மீறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் விரைவில் பாலைவனமாகும்'ன்னு 1950ல்தான் சொன்னார். ஆனால், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்பே நீர்ப்பங்கீட்டைப் பத்தி நம் முன்னோர்கள் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளார்கள். `நிலத்துக்குள் இறங்கிய நீர் தாவரங்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதை எடுக்க மனிதர்கள், விலங்குகள், பறவைகள்ன்னு யாருக்கும் உரிமையில்லை. மனிதர்களுக்கு ஆற்றுநீர், ஊற்றுநீர், ஏரி, குளம், கண்மாய், ஊருணி நீர்தான் சொந்தம். நிலத்துக்குள் போகும் நீர் மறைமுகமாக மனிதர்களுக்குத் தாவரங்கள் மூலம் உயிர்காற்றையும், உணவையும் வழங்குகிறது'ன்னு அப்போதே வகுத்து வைத்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில்கூட, `முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்'ன்னு இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

நிலத்தடி நீர் நல்லசாமி

ஆனால், தமிழகத்தை ஆண்ட, ஆள்கிற திராவிடக் கட்சிகள் விவசாயிகளை ஆழ்குழாய் கிணறுகள் போட ஊக்குவித்து, அவர்களைக் கடனாளி ஆக்கி தற்கொலை செய்ய வைத்தது. கணக்கில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, தமிழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைவனமாக மாற்ற வைத்துவிட்டார்கள். இவர்களைத் தவிர, 2000 அடி வரை அரசு, தனியார் தொழிற்சாலைகளையும், தண்ணீரைக் காசாக்கும் நிறுவனங்களையும் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்களையும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க அனுமதித்து, பல இடங்களில் நிலத்தடி நீர் 2000 அடிகளுக்குக் கீழே போகும்படி செய்துவிட்டார்கள். மண்மீது முளைக்கும் தாவரங்கள் உயிர்வாழ்வதற்கு 2000 அடி வரை எப்படி வேர்களை அனுப்பி தண்ணீர் எடுக்கும்?. அத்தனையும் கருகி மடிந்துவிடும். தமிழகத்தில் பெய்யும் மழை அளவை விடப் பாதியளவே மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் நிலத்தடி நீர் எடுப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் தடை செய்யப்பட்டிருக்கு. ஆனால், இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் இதை மதிப்பதில்லை. 

நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டது. இந்த நீரைத் தொடர்ந்து எடுத்து சாகுபடி செய்து வந்தால், காலப்போக்கில் நிலம் அனைத்தும் களர் நல்லசாமிநிலமாக மாறும். இயற்கையாக நிலத்தில் மீதுள்ள தாவரங்கள் இந்தத் தண்ணீரை எடுத்துக் கொண்டு எப்படி உயிர்வாழுமென்று நீங்கள் கேட்கலாம். அதற்குத்தான் தூய நீரான மழைநீர் நிலத்துக்குள் போய், அந்த உப்புநீரை நல்ல நீராக மாற்றி சமநிலைப்படுத்துகிறது. ஆனால், நாம் அதை உறிஞ்சி எடுத்து இயற்கை சுழற்சிக்குக் கேடு விளைவிக்கிறோம். இந்த விஷயம் உச்சநீதிமன்றத்திற்கே புரியவில்லை என்பதுதான் வேதனை. நமக்கு இறுதித் தீர்ப்பில் பதினாலே முக்கால் டி.எம்.சி நீரைத் குறைத்துள்ள உச்சநீதிமன்றம் `அதைத் தமிழக விவசாயிகள் நிலத்தடி நீரிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருப்பது வேதனை. இது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்குற கதையால்ல இருக்கு?. இயற்கை நீரை எடுக்கச் சொல்ல உச்சநீதிமன்றத்திற்கே உரிமை இல்லை. நம் முன்னோர்கள் ஏரி, குளம், கண்மாய், ஊருணி நீரை மட்டுமே பயன்படுத்தினார்கள். அவற்றை அமைக்க, அவற்றின் கரையை பலப்படுத்த உள்ளே இருந்து மண் எடுக்கமாட்டாங்க. வெளியில் இருந்துதான் எடுப்பாங்க. காரணம், நிலத்தடி நீரை எடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், `அறிவியலில், பகுத்தறிவில், இயற்கைச் சூழலியலில் இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டோம்' என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாம்தான் நிலத்தடி நீரை 365 நாள்களும் உறிஞ்சி எடுத்து இயற்கைச் சூழலியலுக்கு வேட்டு வைக்கிறோம். 

நிலத்தடி நீரை அவசரக்காலத்துக்குக் கொஞ்சமாக ஊறுகாய் போல வேண்டுமானால் எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், உணவு போல 365 நாள்களும் நிலத்தடி நீரை உறிஞ்சுவது இயற்கைப் பேரிடர்களையே கொண்டு வந்து சேர்க்கும். தமிழகத்தில், குறிப்பாக டெல்டா பகுதியில் எங்குப் பார்த்தாலும் ஆழ்குழாய் கிணறுகள் மயமாகத்தான் இருக்கு. விவசாயிகள் அதை உணரவில்லை. காரணம், அரசாங்கமே முன்னின்று அவர்களைத் தவறான வழியில் நகர்த்தியதுதான். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 20 வருடங்களில் தமிழகம் தாவரங்கள் இல்லாத மாநிலமாகும். அதனால், ஒருசொட்டு மழைகூட பெய்யாத வறண்டப் பிரதேசமாகும்.

இதற்கு மாற்று வான் மூலம் வரும் மழைநீரை மட்டும் பயன்படுத்துவதுதான். ஆறுகளில் போகும் நீரைக் கடலில் கலக்கவிடாமல் தடுப்பது இயற்கைக்கு எதிரான செயல்தான். ஆனால், அந்த இயற்கைச் சுழற்சிக்கு ஊறு ஏற்படாத வகையில், ஆறுகளின் நீரைத் தமிழக விவசாயத்துக்குக் கொஞ்சமாக தேக்கிப் பயன்படுத்தலாம். தமிழகம் மழை மறைவு மாநிலமாகும். ஆனால், கேரளா மழை நிறைவு மாநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் எண்ணற்ற ஆறுகள் உற்பத்தியாகின்றன. அவற்றை அவர்கள் தேக்க வழியில்லை. அப்படியே அணைகள் கட்டி தேக்கினாலும், அவ்வளவு நீரையும் பயன்படுத்த தேவையில்லை. பாண்டியாறு, புன்னம்புலா, அச்சன்கோவில் ஆறு, இடுக்கி ஆறு, பெரியாறு, கல்லாறு, ஆட்டின்கால் ஆறு, கரமனா ஆறு, கொடுமுடி ஆறுன்னு பல ஆறுகள் மூலம் ஆண்டுக்கு 2000 டி.எம்.சி தண்ணீர் அரபிக்கடலில் கடலில் கலக்குது. இயற்கைச் சுழற்சிக்குப் பாதிப்பில்லாத வகையில் அந்த ஆறுகளின் தண்ணீரை பம்பிங் திட்டம் மூலமோ, மலையைக் குடைந்து ஆறுகள் மூலமாகவோ தமிழகத்துக்கு வெறும் 200 டி.எம்.சி தண்ணீரைக் கொண்டு வரலாம். உலகத்தின் சராசரி மழையளவு 950 மில்லிமீட்டர். ஆனால், இந்தியாவின் மழையளவு 1250 மில்லிமீட்டர். இந்தியாவில் மழை மூலம் ஆண்டுக்கு 70,000 டி.எம்.சி தண்ணீர் கிடைக்குது. ஆனால், அவற்றில் 20,000 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்தாமல் இயற்கைச் சூழலுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் குறைந்த அளவு நீரை நாடு முழுக்க பயன்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இதுதான் இயற்கைக்கும் நமக்கும் நல்லது. `இல்லை...இதுபோல் எங்கும் நீக்கமற ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துத்தான் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துவோம்' என்று செயல்பட்டால், தமிழகம் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் பாலைவனமாகும்" என்று எச்சரித்து முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்