வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (06/08/2018)

கடைசி தொடர்பு:17:45 (06/08/2018)

'ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பே இல்லை!' - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி

" ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் எனப் பொய்யான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம். ஆலை திறக்கப்பட வாய்ப்பு இல்லை” என்கிறார் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, கடந்த மே மாதம் 28-ம் தேதி நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. அத்துடன், ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 16-ம் தேதி, ஆலையில் இருந்து கந்தக அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலின்படி, சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர், ஆலைக்குள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், இருப்பு வைக்கப்பட்டுள்ள கந்தக அமில சேமிப்புக்கலனில் இருந்து ஆசிட் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனே சரி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் ஆலையில் இருந்து கந்தக அமிலம், லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, மற்ற அமிலங்களின் சேமிப்புக் கலன்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதுகுறித்து ஆய்வுசெய்யப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், '  30 நாள்களுக்குள்  ஆசிட் வகைகள், பெட்ரோலியம், கேஸ் பொருள்களை வெளியேற்ற வேண்டும்' என அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கடந்த 30 நாள்களாக  அகற்றும்  பணி நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ” ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆசிட் வகைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன. பெட்ரோலியப் பொருள்களும் தேவையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை சார்ந்த உள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுவருகின்றன. இதுவரை, 46 ஆயிரம் டன் ஜிப்சம், 23 ஆயிரம் ராக் பாஸ்பேட் அகற்றப்பட்டுள்ளன. மேலும், ராக் பாஸ்பேட், ஜிப்சம், காப்பர் மணல் ஆகியவை அதிக அளவில் இருப்பதால், இவற்றை அகற்றுவதற்கு மேலும் சில நாள்கள் தேவைப்படுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற பொய்யான தகவல்கள், பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டுவருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கொள்கைமுடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டது. அத்துடன் ஆலையும் சீல் வைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் ஆலை திறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, பொதுமக்கள் யாரும் பொய்யான தகவலை நம்ப வேண்டாம். ஆலையைச் சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க