`விதைகளுக்காகக் கையேந்தும் நிலை ஒழியணும்' - அரியலூரில் நடந்த பாரம்பர்ய விதைத் திருவிழா

விவசாயிகளின் ஆயுதமே இனி பாரம்பர்ய விதைகள்தான். இதை உணர்ந்துகொண்டுதான் பல இடங்களில் பாரம்பர்ய விதைத் திருவிழாக்களைத் தமிழகம் முழுவதும் நடத்திவருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் பாரம்பர்ய விதைத் திருவிழா நடைபெற்றது.

விதைத் திருவிழா

அரியலூரில் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தின் சார்பில் விதைத்திருவிழா, கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்குகள் நடைபெற்றன. கண்காட்சியில் நாட்டு நெல் ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா, அறுபதாம் குருவை மற்றும் பல்வேறு மரபு வகை நெல் விதைகள், நாட்டுக்கம்பு, குதிரை வாலி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய விதைகள், கடலை, உளுந்து, முந்திரி, நாட்டுப் பருத்தி விதைகள், சிறுதானிய விதைகள், அரிய மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும், இயற்கை சாகுபடிக்கான இடுபொருள்கள், இயற்கை உணவுகள், வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

பாரம்பர்ய விதைத் திருவிழா

மரபு வழி நெல்குறித்து மயில்வாகனன் பேசுகையில், ``இயற்கை முறையில் நாட்டு விதைகளைக் கொண்டு சாகுபடி செய்யும்போது உயிர்க்கொல்லி மருந்துகளை அடிக்க வேண்டிய அவசியமில்லை. ரசாயன உரங்களைப் பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது. பூச்சி மருந்தை அடிப்பதால் பயிருக்கு நன்மை செய்யக்கூடிய பூச்சிகளும் அழிக்கப்பட்டு நஞ்சு கலந்த உணவே நமக்குக் கிடைக்கிறது. இதற்கு மாற்றாகப் பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய பூச்சுகளைப் பெருக்குவதால் தீமைசெய்யக்கூடிய பூச்சுகள் அழிக்கப்படுகிறது. மேலும், நன்மை செய்யும் பூச்சுகளைக் கவர்ந்து இழுக்கக்கூடிய தானிய வகைபயிர்களை வயல்களின் ஓரங்களில் நடுவதால் நன்மை செய்யும் பூச்சுகள் பெருகி அது தீமை செய்யும் பூச்சுகளை அழித்து விடுகின்றன. இதனால் நமக்கு இயற்கையான உணவு கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கான நாட்டு விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். விதைகளுக்காக அந்நிய நிறுவனங்களிடம் கையேந்தும் நிலை ஒழிய வேண்டும் என்பதே விதைத் திருவிழாவின் முக்கிய நோக்கம்'' என்று கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!