‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன்’- நீதிமன்ற வளாகத்தில் வைகோ பேட்டி

``இந்தியாவில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கும் வரை தொடர்ந்து சட்டரீதியாகப் போராடுவேன்'' என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

வைகோ

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 26 வருடங்களாக தடை தொடர்ந்துவருகிறது. ஒவ்வோர் இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தடையால் வைகோ எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. அதனால், தடையை எதிர்த்து வழக்குத் தொடர அவருக்கு அடிப்படை உரிமை இல்லை எனச் சட்டவிரோத தடுப்புத் தீர்ப்பாயம் முன்னதாக வைகோவின் மனுவை நிராகரித்துள்ளது. எனவே, டெல்லியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்ய வேண்டும். மேலும், இது குறித்து அரசு தரப்பு முழு விவாதத்தை முன்வைக்க கால அவகாசம் வேண்டும்'' என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், இந்த வழக்கு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “ விடுதலைப்புலிகள் தடை தொடர்பான வழக்கு, வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கம் இல்லை என ஜெனீவா நீதிமன்றமே உத்தரவு பிறபித்துள்ளது. இந்த இயக்கத்தின் தடையால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அரசு தரப்பு வாதம் முன் வைத்தது. ஆனால், நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளன், அனுதாபி என்ற முறையில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளேன். அடிப்படையிலேயே இந்தத் தடை நிராகரிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து நான் எடுத்துரைத்துவருகிறேன். வரும் 14-ம் தேதியும் இதையே எடுத்துரைப்பேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கும் வரை தொடர்ந்து சட்டரீதியாகப் போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!