வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (06/08/2018)

கடைசி தொடர்பு:18:45 (06/08/2018)

'ஒண்டிவீரன்' பிறந்த தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை!

விடுமுறை

விடுதலைப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் பிறந்த தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் சிலர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

செல்வக்குமார்சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 247-வது பிறந்தநாள், வரும் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேசினார். சுதந்திரத்துக்காகப் போராடிய ஒண்டிவீரன் மற்றும் குயிலி ஆகியோரை கௌரவிக்கும் விதமாக, தபால்தலை மற்றும் உள்ளூர் விடுமுறை விடக் கோரிக்கை வைத்தனர்.

இந்தச் சந்திப்புகுறித்துப் பேசிய மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார், ‘ஒண்டிவீரனுக்குக் கடந்த 2014-ம் ஆண்டு நினைவு மண்டபம் உருவாக்கி, அதில் சிலையை நிறுவி,  அதற்காக 62 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. அதில், 15 சென்ட் நிலத்தில் கட்டடமும் கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தை காணொலி மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தற்போது, ஆண்டுதோறும் ஒண்டிவீரனின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. ஒண்டிவீரன் மற்றும் குயிலி ஆகியோரை கௌரவிக்கும் விதமாக தபால் தலை மற்றும் உள்ளூர் விடுமுறையை அறிவிக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். முதல்வரும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்” என்று கூறினார்.