'பெல்லிசூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி' வரிசையில் இடம்பிடிக்கிறதா 'சி அர்ஜுன் லா சௌ'..! #ChiArjunLaSow

மகிழ்ச்சியையும், துன்பத்தையும் வேறு எந்தத் தீவிர உணர்வையும் அதீதமாக வெளிப்படுத்தும் குறைபாட்டைச் சரியாகப் பிரதிபலித்திருப்பதற்காக அவர் செய்த ஹோம்வொர்க்கைத் தெரிந்துகொள்ள விருப்பம். 

'பெல்லிசூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி' வரிசையில் இடம்பிடிக்கிறதா 'சி அர்ஜுன் லா சௌ'..! #ChiArjunLaSow

              பறந்தே பக்கத்து நாட்டுக்குப் போவது, மைல்டான நிறங்களை மருந்துக்கும் காட்டாமல் டார்க் கலர் ட்ரெஸ்ஸோடு பல்டி ஸ்டெப்ஸ் போடுவது, சுமார் 16 பக்கம் வசனத்தை மூச்சு விடாமல் பேசுவது போன்ற டாஸ்குகளையெல்லாம் உடைத்துக்கொண்டு வெளிவந்த படங்கள் பெல்லிசூப்புலு, அர்ஜுன் ரெட்டி போன்ற தெலுங்கு சினிமாக்கள். பேருந்திலோ, ரயிலிலோ ஏறும்போது, தெலுங்கு பேசும் நபர்கள் மாட்டிவிட்டால், அவர்களை இத்தகைய ஸ்டீரியோடைப் தெலுங்குப் பட பேட்டர்ன்களை வைத்து கிண்டலடிப்பதற்கு யோசிக்கவைத்தன இந்த இரண்டு படங்களும். பெல்லிசூப்புலுவை மறுபடி ஒருமுறை ஞாபகப்படுத்தியிருக்கிறது நடிகர், அறிமுக இயக்குநர் ராஹுல் ரவிந்திரனின் `சி லா செள’.

Chi la Sow

பெல்லிசூப்புலுவைப் போலவே பெண் பார்க்கும் படலமும், அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்களும்தாம் படத்தின் மூச்சு. ஆனால், அர்ஜுன் ரெட்டியைப் போல, இங்கு ஹீரோவே எல்லாவற்றையும் முடிவு செய்யவில்லை. வசனம், மேக்கிங் எனத் தெலுங்கு சினிமாவையே திருப்பிப்போட்ட படம்தான் அர்ஜுன் ரெட்டி. ஆனால், அதில் அர்ஜுன்தான் எல்லாவற்றையும் முடிவு செய்பவராக இருந்தார். காதலிக்கிறாரா இல்லையா எனத் தெரியாமல் பொது இடத்தில் வைத்து முத்தமிடுவதில் தொடங்கி, வீட்டிலிருப்பவர்களை பிரிந்து காதலில் வெல்ல நேரம் குறிப்பது வரை, எல்லாமே அவர்தான். பாவமாகப் பார்த்து, குழந்தைபோல தலையாட்டிக் கொண்டிருந்த ஷாலினி பாண்டேவுக்கும், `சி லா செள’வின் ருஹானி ஷர்மாவுக்கும் ஆறில்லை, நூறு வித்தியாசம் இருக்கிறது. 

ஹீரோ சுஷாந்தின் கதாபாத்திரத்தின் பெயரும் அர்ஜுன்தான். அர்ஜுன் ரெட்டி படத்தில் அர்ஜுனுக்கு  அப்பாவாக நடித்தவர்தான் இதிலும் அப்பா. அவ்வளவு சீரியஸான அர்ஜுன் ரெட்டியில் காமெடியையும் நடிப்பையும் கலந்து கலக்கிய நண்பன் ராஹுல் ராமகிருஷ்ணா, திரையில் தோன்றும் கொஞ்ச நேரத்தில் அப்லாஸ் வாங்குகிறார். காய்ச்சல் வந்ததற்கு கேன்சர் பில்டப் கொடுத்தும், மகனுக்கு டேட்டிங் அரேஞ்மென்ட் செய்தும் அதகளம் செய்யும் மம்மியாக மாறியிருக்கிறார் அனுஹாசன்.

இந்த லோ பட்ஜெட் படத்தில் வாழ்க்கைப் பாடங்கள் பலவற்றைக் கஞ்சத்தனமில்லாமல் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஹுல். `யாரையாவது உணர்வுபூர்வமா சார்ந்திருக்கிறதுதான் பயமாயிருக்கு. அதுதான் கஷ்டம். அதுதான் பலவீனமோ’ என்று பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு பேசும் ருஹானி, குடும்பத்திற்காகத் தன்னலமில்லாமல், தனக்காக வாழ்வதன் அர்த்தம் தெரியாமலே போன பல்வேறு `சிங்கிள் உமன்களின்’ வலிகளைக் கடத்துகிறார். `டால் ப்யூட்டி அனுஷ்கா, மில்க்கி ப்யூட்டி தமன்னா’வை எதிர்பார்த்து வரும் மாப்பிள்ளைகள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி ருஹானி பேசும்போது, அரங்கத்தில் இருந்த அனைத்துப் பெண்களும் `ஆமாம்’ என்பதாக ரியாக்ட் செய்தார்கள். முகப்பருக்கள் இருப்பதற்காகவெல்லாம் புறக்கணிக்கப்பட்ட கதையைச் சொல்லும்போது, ஆடியன்ஸைத் தன் வசப்படுத்திவிட்டார் அழகி.

Chi la Sow
  

 

உழைத்து முன்னேறுவது, படித்து முன்னேறுவது, ஒரே சாங்கில் ஃபாஸ்ட் பார்வேடில் ஓடி முன்னேறுவது எனப் பாரபட்சம் பார்க்காமல் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கானதாகவே இருந்த தமிழ் சினிமாவில், Career உமனின் வாழ்க்கையைப் பேசியது `காதலும் கடந்து போகும்’. முழுமையாக ருஹானி ஷர்மாவைச் சுற்றியே நகரும் இந்தப் படம், தெலுங்குப் படங்களின் `ககபோ’தான். ஹீரோ அனுமோலு சுஷாந்துக்குப் பால் வடியும் முகம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மாவை நினைத்துக் கவலைப்படும் ருஹானியை, இட்லிக்கடைக்கு அழைத்துப்போனது மட்டுமல்லாமல், கனவில் டான்ஸ் வேறு ஆடிக்கொண்டிருக்கிறார்.

பைபோலார் குறைபாடு கொண்டவர்களின், எபிசோட் மனநிலையையும், உடல்மொழியையும் நிஜத்தன்மை விலகாமல் திரையில் வடித்திருக்கிறார், ருஹானியின் அம்மாவாக வரும் ரோகிணி. மகிழ்ச்சியையும், துன்பத்தையும் வேறு எந்தத் தீவிர உணர்வையும் அதீதமாக வெளிப்படுத்தியிருக்கும் ரோகிணியிடம், நிச்சயம் இதற்காக அவர்செய்த ஹோம்வொர்க்கைத் தெரிந்துகொள்ள விருப்பம். 

பார்க்கும் ஒவ்வொருவருடன் ஒவ்வொரு பரிமாணத்தில் பேசும் கதாபாத்திரங்களைப் படைப்பதில் வெற்றி கண்டிருக்கிறது ராஹுலின் பேனா.

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!