`எங்களை மூளைச்சலவை செய்துவிட்டார் வின்ஸ்டார் சிவக்குமார்'- கலெக்டரிடம் கண்ணீர் விட்ட தம்பதி!

''சேலம் ஃபோர்ஜரி மன்னன் வின்ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர்  சிவக்குமார் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடம்  ஆன பிறகும் அவரால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், பணம் பெறத் தினந்தோறும் அலைந்துகொண்டிருக்கிறோம்.  சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் எந்த நடவடிகையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.' என்று அழுதுகொண்டே  சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு தம்பதி வந்தார்கள்.

வின்ஸ்டார் சிவக்குமார் மீது புகார் அளித்த தம்பதி

அவர்களிடம் கேட்டபோது, ''நாங்க சேலம் கன்னங்குறிச்சியில் இருந்து வர்றோம். என் பேரு ராதாகிருஷ்ணன். எனக்கு ஒரு கால் ஊனம். குச்சி வைத்துதான் நடக்க முடியும்.  என் மனைவி பேரு லட்சுமி. எங்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். நான், உடையாப்பட்டி கந்தகிரி நூல் மில்லுக்கு வேலைக்குப் போயிட்டிருந்தேன். உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு போகாமல் நின்றுவிட்டேன். எனக்குச் சொந்தமாக இருந்த 30 சென்ட் நிலத்தை விற்றதில் 20 லட்சம் கிடைத்தது. அதில் 2 பெண்களுக்கும் திருமணம் செஞ்சுவச்சுட்டேன்.

மீதி 7 லட்சம் வச்சிருந்தேன். கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரவணப்பிரியன் என்பவர் ஒரு வருடத்தில் இரட்டிப்புத் தொகை தருவதாகச் சொல்லி,  என்னை மூளைச்சலவை செய்து, 6.50 லட்சத்தை வின்ஸ்டார் நிறுவனத்தில் பணம் போடச் செய்தார். நானும் என் மனைவியும் அவர் பேச்சைக் கேட்டு பணத்தைப் போட்டோம். ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை ஒரு பைசாகூட தரவில்லை. இதனால், எனக்கும் என் மகனுக்கும் சண்டை வந்து, என் மகன் சிறைக்குப் போயிட்டான். ஒவ்வொரு முறையும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸிடம் கேட்டால், ரெண்டு மாசமாக இதோ வாங்கித் தர்றேன், அதோ வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு, இப்ப இன்ஸ்டார் சிவக்குமார் எங்களையே மிரட்டுகிறார்'. கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், விஷத்தைக் குடிச்சுட்டு இறந்து விடுவோம்'' என்றார் வேதனையுடன்.

சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரித்தபோது, ''வின்ஸ்டார் சிவக்குமார் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருப்பதால், மேற்கொண்டு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே நடவடிக்கை எடுக்க முடியும்'' என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!