வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (06/08/2018)

கடைசி தொடர்பு:18:30 (06/08/2018)

`உள்ளாட்சித் தேர்தலை நடத்த அ.தி.மு.க-வுக்கு தயக்கம் ஏன்?’- விளக்கும் ஆர்.எஸ்.பாரதி

மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால், அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயங்குவதாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தொடுத்த வழக்கு, மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையைத் தாக்கல்செய்யவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் நேரில் ஆஜராகி ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், வார்டு மறுவரையறைப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், தேர்தல் அட்டவணையைத் தாக்கல்செய்ய இயலவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஊரக வார்டு மறுவரையறை அறிக்கை, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள்ளும் நகர்ப்புற வார்டு மறு வரையறை அறிக்கை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள்ளும் தமிழக அரசிடம் தாக்கல்செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய அடுத்த மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் பாரதி

இது தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளரும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கைத் தொடுத்தவருமான ஆர்.எஸ்.பாரதியிடம் பேசுகையில், `நீதிமன்றம் இவ்வளவு முறை கூறியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தேர்தலை நடத்தத் தயங்குகிறது என்றால், மக்கள் செல்வாக்கை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதுதான் அர்த்தம். அந்த உண்மை அவர்களுக்கே தெரிந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் அவர்களது திட்டம். தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1996-ம் ஆண்டு, கருணாநிதி 3 மாதத்துக்குள் தொகுதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்தி முடித்தார். அதேபோல, 2006-ம் ஆண்டும் நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, 3 மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆளும் அ.தி.மு.க அரசு, 3 வருடம் ஆகியும் தேர்தலை நடத்தாமல் கால தாமதம்செய்துவருகிறது.

உள்ளாட்சிப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. உள்ளூர்களில் போடப்படும் ஒப்பந்தங்களை அமைச்சர்கள் எடுத்துக்கொண்டு முறைகேடு செய்துவருகின்றனர். சாதாரண ஒப்பந்தங்கள்கூட அமைச்சர்களின் அறைகளில் பேசப்பட்டு பங்கு பிரிக்கப்படுகிறது. தனி அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இருப்பதேயில்லை. மக்கள் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கவோ, மக்களால் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவோ முடியாத அவலநிலை நீடித்துவருகிறது. ஒருவாரம், பத்துநாள் ஆனால்கூட,  சாதாரண தெருவிளக்கைக்கூட மாற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்பட்டுவருகின்றனர்.  உள்ளாட்சிக்கான நிதி என்பது, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அவர்களுக்கு கமிஷன் வருமோ, அந்தப் பகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடுசெய்கின்றனர். 31-ம் தேதி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர். அன்று நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.