கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு! - தொண்டர்கள் தவிப்பு #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை சிறிய பின்னடைவு ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருநாவுக்கரசர்
 

தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் குவிந்தனர். போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். கருணாநிதியின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் தொண்டர்களிடம் கூறினர். தொண்டர்கள் அவர்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதனை அடுத்துக் கடந்த இரண்டு நாள்களாக மருத்துவமனை வாசலில் தொண்டர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 

இந்நிலையில் இன்று மதியம் கருணாநிதியைப் பார்க்க அவரின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கருணாநிதியைப் பார்க்க தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனை வருவது இதுவே முதல்முறை. இது கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால்தான் தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார் என்று அவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கட்சியினர் யூகித்தது போலவே கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

தயாளு அம்மாள்
 

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று மதியம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், `தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்காகக் கடவுளிடம் பிரார்த்திப்போம்’ என்றார். 

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, ‘கருணாநிதி நலமாக உள்ளார்’ என்று வாடிய முகத்துடன் தெரிவித்தார். அவர் அதற்கு மேல் பேசவில்லை. தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!