`முழு அறிக்கையும் தமிழக அரசு வெளியிடுமா?’ சட்டப் பஞ்சாயத்து கேள்வி

`பொது விவகாரங்கள் மைய அறிக்கையின் முழு விவரங்களையும் தமிழக அரசு வெளியிடுமா?’ என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழக அரசு அளித்த  விளம்பரம்


இன்று நாளிதழ்களில் தமிழக அரசு கொடுத்திருந்த விளம்பரம் தொடர்பாகச் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு இன்று அனைத்து நாளிதழ்களிலும் அரைப்பக்க விளம்பரம் ஒன்று கொடுத்துள்ளது. அதில், சில துறைகளில் தமிழக அரசு, இந்தியாவிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. “பொது விவகாரங்கள் மையத்தின் சமீபத்திய அறிக்கையை (2018)” அடிப்படையாகக் கொண்டு இவ்விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் சில அம்சங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்பது உண்மை. ஆனால், இவ்வறிக்கையை முழுமையாகப் பார்த்தால், மாநிலத்தின் கடன் - சொந்த வரிவருவாய் - வருவாய் - மூலதன செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய நிதி மேலாண்மையில் 18வது இடம், தகவல் ஆணையம் - லோக் ஆயுக்தா-ஈ-கவர்னென்ஸ்- லஞ்சஒழிப்புத்துறை செயல்பாடு-உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கல் போன்றவற்றை உள்ளடக்கிய ``வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள அரசு நிர்வாகத்தில் (Transparency, Accountability)” 17வது இடம், சிறு, குறு தொழில் வளர்ச்சியில் (Economic Freedom) 12வது இடம், சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் 9வது இடத்தைத்தான் தமிழக அரசு பெற்றுள்ளது என்ற விவரங்கள் உள்ளது தெரியவரும். அதாவது, பல முக்கிய அம்சங்களில் தமிழகம் மோசமான நிலையில் உள்ளது என்பது தெரிய வருகிறது. ஆனால், ஒரு சில விஷயங்களை மட்டும் குறிப்பிட்டு தமிழகம் இந்தியாவிலேயே முதல் இரண்டு இடங்களில் உள்ளது என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் முழுவிவரங்களையும் வெளியிடாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவரங்களை மட்டும் வெளியிடுவது மக்களை ஏமாற்றும் செயல். அப்பட்டமாக விளம்பரம் தேடும் செயல். புலியைப்போல் தன் உடம்பிலும் வரிகள் வேண்டும் என்று ஆசைப்பட்டு, பூனை சூடுபோட்டுக்கொண்டதுபோல் உள்ளது இவ்விளம்பரம். பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திர, தெலுங்கானா போன்றவை பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதால் இதுபோன்ற விவரங்களை, விளம்பரங்களை அவர்கள் வெளியிடுகிறார்கள். அவர்கள் வெளியிடுவதுபோல் நாமும் வெளியிட வேண்டும் என்று முதல்வர் ஆசைப்பட்டதன் விளைவாகத்தான் இவ்விளம்பரம் வெளியாகியுள்ளது என்று புரிந்துகொள்ள முடிகிறது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தொடங்கிய விளம்பர மோகத்தை இன்று வெளியாகியுள்ள விளம்பரம் வரை தொடரும் முதல்வர் பழனிசாமியும் ஜெயலலிதா வழியை சிறப்பாகத் தொடர்கிறார்கள். ஆம், `சொத்துக்குவிப்பு வழக்கு- விளம்பர மோகம்’ என `அம்மா’ வழியை சிறப்பாகத் தொடர்கிறார்கள் முதல்வரும் துணை முதல்வரும். முதல்வர் பழனிசாமி விளம்பரங்கள் கொடுப்பதில் காட்டும் அக்கறை, ஆர்வத்தை நிதி மேலாண்மையை மேம்படுத்துவதிலும், சிறு-குறு தொழில் வளர்ச்சியிலும், வெளிப்படையான, பொறுப்புணர்வு மிக்க அரசு நிர்வாகத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!