`பைக் சாவியைப் பிடுங்க நீ யார்?' - போலீஸை விமர்சித்துக் கைதான துணிக்கடை அதிபர் மகன் | an young man arrested for threatning police

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (06/08/2018)

கடைசி தொடர்பு:20:00 (06/08/2018)

`பைக் சாவியைப் பிடுங்க நீ யார்?' - போலீஸை விமர்சித்துக் கைதான துணிக்கடை அதிபர் மகன்

செல்போனில் பேசியபடி பி.எம்.டபிள்யூ பைக்கில் வந்த துணிக்கடை அதிபரின் மகன் போலீஸாரைத் தகாத வார்த்தைகளால் விமர்சித்ததால், கைது செய்யப்பட்டார். 

வாலிபர் கைது

நாகர்கோவிலில் பிரபல துணிக்கடையின் அதிபர் ஒருவரின் மகன் ஸ்ரீநாத். இவர் நேற்று விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ பைக்கை ஓட்டியபடியும் மொபைல் போனில் பேசியபடியும் வேகமாக வந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து சிக்னலைக் கடந்தபோது, சாலை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து செல்போனில் பேசியபடியே சென்றுள்ளார். இதனால் அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர், `டூ வீலரை ஓரமா நிறுத்துங்க' எனக் கூறியபடியே பைக்கின் சாவியை எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீநாத், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் காவல்துறையினரைத் திட்டியுள்ளார். போலீஸாருடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட ஸ்ரீநாத்தைக் கைது செய்து, நேசமணி நகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு, ஜாமீனில் விடப்பட்டார். பிரபல துணிக்கடை அதிபரின் மகன் காவலர்களுடன் தகராறு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.