கருணாநிதி உடல்நிலை... காவேரியில் பரபரப்பு!

மஞ்சள் காமாலையின் தீவிரம் இன்னும் குறையாத காரணத்தினால், சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், கருணாநிதிக்கு இந்த நேரத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்திருப்பதால், ஐ.சி.யூ-வின் அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

கருணாநிதி உடல்நிலை... காவேரியில் பரபரப்பு!

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் கடந்த 2016 ம் ஆண்டு, முதல்முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அப்போது அவருக்கு `ட்ரக்கியோஸ்டோமி' (தொண்டைக்குழி அறுவை சிகிச்சை) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வருகிறார் கருணாநிதி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே உடல் நலக்குறைவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த  ஜூலை மாதம் 18 ம் தேதி உடல் நிலைப் பரிசோதனை மற்றும் ட்ரக்கியோடோமி கருவியை மாற்றுவதற்கும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதன் பின்னர், வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரது உடல் நிலையில் திடீர் சோர்வு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், கோபாலபுரம் வீட்டுக்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றானதால் மீண்டும், கருணாநிதியைக் காவேரி மருத்துவமனைக்கே அழைத்துச் செல்ல முடிவு எடுத்தனர்.

கருணாநிதி

அதன்படி, கடந்த 28 ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கருணாநிதியை அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் குழு கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியின் தலைவர்களும் நலம் விசாரித்தனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, மருத்துவச் சிகிச்சையில் இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகப் புகைப்படங்கள் வெளியாகின. இது தி.மு.க தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியானது.

இதற்கிடையில், பிற மாநில முதல்வர்கள் உட்பட பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்துச் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றார். கருணாநிதிக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதற்காகத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

சிறப்பு மருத்துவர் முகமது ரெலாகல்லீரலில் ஏற்கெனவே கருணாநிதிக்குச் சில பிரச்னைகள் இருந்ததால், புகழ்பெற்ற கல்லீரல் சிகிச்சை நிபுணர் முகமது ரெலா இரண்டு முறை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருகிறது. மஞ்சள் காமாலையின் தீவிரம் இன்னும் குறையாத காரணத்தினால், சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், கருணாநிதிக்கு இந்த நேரத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்திருப்பதால், ஐ.சி.யூ-வின் அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கட்சியினரிடையே கடந்த சில தினங்களாகத் தகவல் பரவி வருகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள்., எம்.பி-க்கள் எனப் பலரும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். முக்கிய நிர்வாகிகள் பலரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து, கருணாநிதி உடல் நிலை குறித்து உடன்பிறப்புகள் கலக்கத்துடன் விசாரித்து வருகின்றனர். கடந்த 22 ம் தேதி நிலவிய பரபரப்பு, இன்று காலையில் இருந்தே மீண்டும் தொற்றிக்கொண்டுள்ளது. கருணாநிதி குடும்பத்தினர் இன்று காலையிலேயே காவேரி மருத்துவமனைக்கு வந்த நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று மதியம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவர், கருணாநிதியை நேரில் பார்த்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, மறதி நோயால் உடல் நலிவுற்று வீட்டில் ஓய்வில் இருந்த தயாளு அம்மாளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இன்று, கருணாநிதியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், ``கலைஞரின் உடல் நிலையில் காலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் பின்னர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார் கலைஞர். அவரின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டறிந்தேன்'' என்றார். இதற்கிடையில், ``மருத்துவமனை முன்பு அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் கூடி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்'' என்று மருத்துவமனையில் இருந்த தி.மு.க முன்னணியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!