வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (06/08/2018)

கடைசி தொடர்பு:22:20 (06/08/2018)

5 பயணிகள் உயிரிழப்பு எதிரொலி! இடிக்கப்படும் ரயில்வே தடுப்புச்சுவர்கள்

பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி இளைஞர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள தடுப்புச்சுவர்கள் இடிக்கப்பட்டுவருகின்றன. 

தடுப்பு சுவர்கள்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற விபத்து, தமிழக மக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்தோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்று கூட்ட நெரிசல் காரணமாக, பல இளைஞர்கள் ரயில் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். பீச் ஸ்டேஷனில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, ரயில் பரங்கிமலை ஸ்டேஷனைக் கடக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தடுப்புச் சுவரில் இளைஞர்கள் மோதியதில், பலர் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் சார்பில் விபத்து நடந்த இடத்தை ரயில்வே பாதுகாப்புக்குழு ஆணையர் தலைமையில் குழு நேரில் ஆய்வுசெய்தது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே தீர்ப்பாயம் சார்பில் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பரங்கிமலை ரயில் விபத்துக்கு தடுப்புச்சுவரே முக்கியக் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டினர். முழுமையான விசாரணைக்குப் பிறகு, தடுப்புச்சுவர் இடிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புக்குழு ஆணையர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று சென்னை பழவந்தாங்கலில் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள தடுப்புச் சுவர் முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளது. நாளை விபத்து நடக்கக் காரணமாக இருந்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச்சுவர் இடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.