`கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்’ - இந்திரா பானர்ஜி உருக்கம்

நேற்று முதல்வர் என்னை சந்தித்தபோது, நீதிமன்றத்துக்கான திட்டங்களுக்குத் தடைபடாமல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தேன் என்றார் இந்திரா பானர்ஜி.

இந்திரா பானர்ஜி

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நாளை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்க இருப்பதால், இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக, கடந்த 1985-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் இந்திரா பானர்ஜி. பின்னர், 2016-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற்றதால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்திரா பானர்ஜி. இரண்டாம் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையும் அவருக்கு வந்து சேர்ந்தது. 

நாளை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் அனைத்து நீதிபதிகளும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இந்திரா பானர்ஜி, `நான் என் கடமைகளை எந்த பாரபட்சமும் அச்சமுமின்றி செய்தேன். தமிழ்நாட்டு மக்கள் மிக எளிமையானவர்கள், அதேசமயம் கடுமையான உழைப்பாளிகள். நான் கனத்த இதயத்தோடுதான் உச்ச நீதிமன்றம் செல்கிறேன். நான் அங்கு சென்றாலும் என் நினைவுகள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றிதான் இருக்கும். நான் தலைமை நீதிபதியாக இருக்கும் வரை வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை, வழக்கறிஞர்களுக்கு என்னுடைய நன்றிகள். நேற்று முதல்வர் என்னை சந்தித்தபோது, நீதிமன்றத்துக்கான திட்டங்களுக்கு தடைபடாமல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தேன். 

`உயர் நீதிமன்றம் தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என முதல்வர் உறுதியளித்தார்' என்றார். இதையடுத்து பிரிவு உபச்சார உரை நிகழ்வில் பேசிய தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், `தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த ஓராண்டு நான்கு மாத காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்லும் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற வரலாற்றை இந்திரா பானர்ஜி படைத்துள்ளார்’ என்றார் நெகிழ்ச்சியுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!