வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (06/08/2018)

கடைசி தொடர்பு:19:04 (06/08/2018)

`கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு’ - காவேரி மருத்துவமனை அறிக்கை!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை


தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் கடந்த 2016 ம் ஆண்டு, முதல்முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அப்போது அவருக்கு `ட்ரக்கியோஸ்டோமி' (தொண்டைக்குழி அறுவைசிகிச்சை) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வருகிறார் கருணாநிதி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகக் கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த  ஜூலை மாதம் 18-ம் தேதி உடல்நிலைப் பரிசோதனை மற்றும் ட்ரக்கியோடோமி கருவியை மாற்றுவதற்கும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதன் பின்னர், வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரின் உடல் நிலையில் திடீர் சோர்வு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், கோபாலபுரம் வீட்டுக்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றானதால் மீண்டும், கருணாநிதியைக் காவேரி மருத்துவமனைக்கே அழைத்துச் செல்ல முடிவு எடுத்தனர். அதன்படி, கடந்த 28-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கருணாநிதியை அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் குழு கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியின் தலைவர்களும் நலம் விசாரித்தனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, மருத்துவச் சிகிச்சையில் இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகப் புகைப்படங்கள் வெளியாகின. இது தி.மு.க தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியானது. இதற்கிடையில், பிற மாநில முதல்வர்கள் உட்பட பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்துச் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றார். கருணாநிதிக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதற்காகத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மற்றொரு அறிக்கையைக் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், `வயது முதிர்வின் காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.