போலீஸ் கன்னத்தில் அறைந்த வெங்காய வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது!

போலீஸ் கன்னத்தில் அறைந்த வெங்காய வியாபாரி உள்ளிட்ட மூன்று பேரை, விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிரடியாகக் கைது செய்துள்ளது.

கைது

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் எஸ்.ஐ., பாலமுரளி மற்றும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முனாப் மகன் அஸ்லாம் முஸ்தபா (27) என்பவர், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக, சாலையில் மினி டெம்போவை நிறுத்தி வெங்காயம் விற்பனை செய்துகொண்டிருந்தார். பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், அந்த வாகனத்தைப் பறிமுதல்செய்த போலீஸார், காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். அதையடுத்து, காவல் நிலையம் வந்த அஸ்லாம் முஸ்தபாவிடம் போலீஸார் வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டனர். அப்போது, அவருக்கும் எஸ்.ஐ-க்கும் வாக்குவாதம் முற்றியதையடுத்து, காவலர் முருகன் அதைத் தட்டிக்கேட்டார். அதனால், காவலரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எஸ்.ஐ., பாலமுரளியின் கன்னத்திலும் அறைந்தார் வெங்கயாய வியாபாரி அஸ்லாம் முஸ்தபா.

 அதோடு, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை எடுத்துச்சென்றார். அவரைத் துரத்திச்சென்ற போலீஸார் அவரையும், அவரது வாகனத்தையும் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். அந்தத் தகவலறிந்து காவல் நிலையம் வந்த அஸ்லாமின் தம்பி சதாம் உசேன் மற்றும் அவரது உறவினர் சையது முஸ்தபா ஆகிய இருவரும் காவலர் முருகனிடம் தகராறு செய்ததுடன், அஸ்லாம் முஸ்தபா பேரில் எப்படி புகார் கொடுக்கலாம் என்று அவருக்குக் கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர். அதுகுறித்து காவலர் முருகன் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் எஸ்.ஐ., பாலமுரளி, சதாம் உசேன் மற்றும் சையது முஸ்தபா ஆகிய இருவரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்துள்ளார். போலீஸ்காரர்கள்மீது தாக்குதல் நடத்தி, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!