வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (06/08/2018)

கடைசி தொடர்பு:10:21 (07/08/2018)

ரூ.3,500 கோடி வரை வருவாய் ஈட்டிய கரூர் ஜவுளித்தொழிலின் இன்றைய பரிதாப நிலை!

இந்தத் தொழிலை நம்பி, நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 75,000-த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய் வரை அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டித்தந்த இந்தத் தொழில் சமீபகாலமாக நலிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

ரூ.3,500 கோடி வரை வருவாய் ஈட்டிய கரூர் ஜவுளித்தொழிலின் இன்றைய பரிதாப நிலை!

``வருடத்துக்கு 3,500 கோடி ரூபாய் வரை, அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டித்தந்த கரூர் ஜவுளி ஏற்றுமதித் தொழில் பல்வேறு காரணங்களால் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சாயப்பூங்கா இல்லாதது, நூல்விலை ஏற்றம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அழிவின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறத ஜவுளித்தொழில். மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லையென்றால் இந்தத் தொழிலை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கண்ணீர் வடிக்கிறார்கள் கரூரைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள்.

ஜவுளி தொழில்

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள கரூர், வீட்டு உபயோகங்களுக்கான துணிகளின் உற்பத்திக்கும், அவற்றின் ஏற்றுமதிக்கும் பெயர் பெற்றது. கரூரில் தயாராகும் வீட்டு உபயோகத் துணிகள் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய ஜவுளித் தயாரிப்பில் மட்டும் கரூரில் 450-க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. ஜவுளி ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கையோ ஐந்நூறுக்கும் மேல் இருக்கும். இந்தத் தொழிலை நம்பி, நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 75,000-த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய் வரை அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டித்தந்த இந்தத் தொழில் சமீபகாலமாக நலிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தற்போது, கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி மூலம் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டுவதே பெரும்பாடாக உள்ளது எனப் புலம்புகிறார்கள் ஏற்றுமதியாளர்கள். அதற்குக் காரணம், சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த சாயப்பூங்கா இல்லாதது, கடுமையாக அதிகரிக்கும் நூல்விலை, தினமும் உயரும் பெட்ரோல்-டீசல் விலை, மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் போன்றவற்றைக் கூறலாம்.

சுந்தரேசன்ஜவுளித் தொழில் நலிந்து வருவது குறித்து நம்மிடம் பேசிய ஏற்றுமதியாளர் சுந்தரேசன், ``15 வருடங்களுக்கு முன்புவரை, இந்தத் தொழில் மிகச் சிறப்பாக இருந்துச்சு. அப்போதெல்லாம் கரூரில் 550 சாயப்பட்டறைகள் மற்றும் சலவை ஆலைகள் இருந்தன. ஆனால், அவற்றுக்கு உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்ததால், சிறு குறு அளவில் செயல்பட்டு வந்த துணிகளுக்கு சாயமேற்றும் ஆலைகள் மூடப்பட்டன. தவிர, சாயப்பட்டறைகளில் பெரும்பாலானவை ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. இதனால் கரூரில் பல கோடி ரூபாய் செலவில் ஆர்.ஓ பிளான்ட் அமைக்கப்பட்டு, 45 சலவை, சாய ஆலைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. அதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள், 'ஒருங்கிணைந்த சாயப்பூங்கா' அமைக்க வலியுறுத்தி அரசுக்கு தொடர் கோரிகை வைத்தார்கள். இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கரூர் புன்னம்சத்திரம் பகுதியில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா அமைக்க
50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால், அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனினும் மீண்டும் 2014-ல் முதல்வர் ஜெயலலிதா, 'கரூரில் 500 கோடியில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா அமைக்கப்படும்' என்று அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பும் காற்றோடு, காற்றாகப் போய்விட்டது. இதனால், ஜவுளி உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் இங்கே மெள்ள மெள்ள பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இது போன்ற சிரமங்களால், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஜவுளியை அனுப்ப முடிவதில்லை. இதனால், அவர்களுடன் ஒப்பந்தம் செய்த விலையைவிட குறைவான தொகைக்கே விற்கும் அவல நிலை ஏற்படுகிறது. தவிர, 2016-ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளும் சேர்ந்து கொண்டதால், கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலை முடக்கிப் போட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன் வர வேண்டும். இல்லையென்றால் இந்தத் தொழில் மெல்லமெல்ல அழியும் அபாயம் உள்ளது" என்று எச்சரித்து முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்