அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்துச் சொன்ன தி.மு.க தொண்டரணி மாவட்ட அமைப்பாளர்! | DMK party men congratulating the AIADMK district secretary

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (06/08/2018)

அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்துச் சொன்ன தி.மு.க தொண்டரணி மாவட்ட அமைப்பாளர்!

ன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஏ.அசோகனுக்கு, தி.மு.க மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன் வாழ்த்துக் கூறிய ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது.

M.J.Rajan

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டது. குமரி கிழக்கு மாவட்டத்துக்கு எஸ்.ஏ.அசோகன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மாவட்டத்துக்கு ஜாண் தங்கம் செயலாளராக நியமிக்கப்பட்டார். கிழக்கு மாவட்டத் தலைவர் அசோகன், குமரி ஆவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளதால், அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஜே.ராஜன், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.அசோகனுக்கு நேரில் வந்து சால்வை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார். அந்தப் புகைப்படத்தை எம்.ஜே.ராஜன் ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்திருந்தார். இதற்கு தி.மு.க-வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர். அரசியல் நாகரிகம் எனப் பலர் பாராட்டியும் பதிவிட்டிருந்தனர்.

வாழ்த்து

ஜெயலலிதா இருந்த காலம் வரை அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினர் நேரில் கண்டாலும் பேசாமல், எலியும் பூனையுமாக இருந்தனர். ஆனால் இப்போது, தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைவர்கள் பரஸ்பரம் நட்பு பாராட்டிவருகின்றனர். அதுபோன்று, கீழ் மட்டத் தலைவர்களும், பாராட்டுவதில் தவறில்லை என இந்த நல்ல மாற்றத்துக்கு அரசியல் நோக்கர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்துக் கூறியதுகுறித்து எம்.ஜே.ராஜன் கூறுகையில், "நான் சிறு வயதிலேயே தி.மு.க-வில் ஊறிப்போனவன். அசோகன் சிறுவயதிலே அ.தி.மு.க-வில் தீவிரமாக இருந்தார். இருவரும் ஒரே தெருவில் வசிப்பதால் பால்ய சினேகிதர்களாக வளர்ந்தோம். இருவரும் சேர்ந்து ஒரே வாளியில் பசை தயாரித்து, அதில் நான் தி.மு.க போஸ்டர்களை ஒட்டுவேன், அவர் அ.தி.மு.க போஸ்டர்களை ஒட்டுவார். அரசியலில் இரு துருவங்களாக செயல்பட்டாலும், இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். நட்பின் அடிப்படையில் அசோகனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். நான் சென்ற அன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததைப் பார்த்தேன். அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் இதைத் தவறாக விமர்சிக்கிறார்கள்" என்றார்.