வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (07/08/2018)

கடைசி தொடர்பு:00:00 (07/08/2018)

உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்!

'உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்’ என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள்

உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளில் பெரும்பகுதியினர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முற்றிலும் மறுக்கப்படுகிறது. வேலையில்லாத காரணத்தால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியால் வாழவேண்டியிருக்கிறது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகள் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக, விளக்குகளைப் போடவோ அல்லது மின் விசிறிகளைப் போடவோ அணைக்கவோ முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சமையல் செய்வது, கழிவறைக்குச் செல்வது உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய இன்னல்களைச் சந்திக்கவேண்டியுள்ளது. எனவே, இவர்களுக்கு சிறப்பு வசதிகளுடன்கூடிய வீடுகளைக் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள், அனைத்து இடங்களுக்கும் எளிதாகச் சென்றுவர ஏதுவாக, அனைத்து தனியார் மற்றும் அரசு கட்டடங்களிலும் தங்குதடையற்ற சூழ்நிலையை உருவாக்க கைப்பிடியுடன்கூடிய சாய்வு தளம் அமைத்துத் தர வேண்டும்.     

குறிப்பாக, வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் சாய்வுதளம் அமைத்து தர வேண்டும். அரசுப் பேருந்துகளில் உயரமான படிக்கட்டுகள் உள்ளதால், உயரம் குறைவான மாற்றுத்திறனாளிகள் ஏற இறங்க முடியவில்லை. எனவே, அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தாழ்தளப் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். பேருந்துகளில் செல்லும் போது, பேருந்து நிறுத்தத்தில்தான் இறங்கிவிடுவோம் எனக் கூறாமல் நாங்கள் சொல்லும் இடத்தில் நிறுத்தி இறக்கிவிட ஏற்பாடு செய்ய வேண்டும். உயரம் காரணமாக வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சுயமாகத் தொழில் செய்து பிழைப்பதற்காக வங்கிகளில் கடன் வசதிகளை நிபந்தனை இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வர ஏதுவாக, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். உயரம் தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகளைக் கடும் ஊனமுற்றவராகக் கருதி, மாதாந்திர உதவித்தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். உயரம் தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க