வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (06/08/2018)

கடைசி தொடர்பு:22:03 (06/08/2018)

``சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை உறுதிப்படுத்துங்கள்!’’ - திருமாவளவன்

``பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களைப் போலவே சிறுபான்மையினருக்கும் உரிய இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும். மதம் மாறிய மக்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது."

``சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை உறுதிப்படுத்துங்கள்!’’ - திருமாவளவன்

ந்தியாவில் சிறுபான்மை மக்களின் நிலையை அறிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இந்நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த சனிக்கிழமை `வட்ட மேசை கருத்தரங்கம்' ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்துகொண்டு பேசினர். நிகழ்வைத் தொடங்கி வைத்து இந்திய தேசிய லீக்கின் தேசிய தலைவர் சுலைமான் மற்றும் மாநிலத் தலைவர் நிசாமுதின் தொடக்க உரையாற்றினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வஹிதா பேசியபோது, “சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கைகள் சிறுபான்மை மக்களுடைய சமூக, பொருளாதார நிலைகளை வெளிப்படையாகக் கூறியவை. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் அதை முழுமையாக நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இன்று வரை காலம் தாழ்த்தி வருகின்றன. சச்சார் கமிட்டியின் 76 பரிந்துரைகளில் 46 ஏற்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், அவை இன்றளவும் முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமல்லாது வங்கிகளில் சிறுபான்மையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள கடன்களும் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கிறது” என்றார்.

சச்சார் கமிட்டி அறிக்கை

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தியாகு பேசுகையில், “சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கைகள் இடஒதுக்கீடு பற்றி மட்டும் பேசாமல், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரம் தலித் மக்களின் நிலையைப் போலவே பின்தங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது” என்றார்.

தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் பேசுகையில், “சச்சார் கமிட்டியின் அறிக்கைக்குப் பிறகுதான் இஸ்லாமிய மக்களின் உண்மை நிலை பலருக்கும் தெரியவந்தது. ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கை, 'அரசியலமைப்பின் 16(4) பிரிவில் பிற்படுத்தப்பட்டவர்களில் இஸ்லாமியர்களும் அடங்குவர்' என வலியுறுத்தியிருந்தது. ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விஷயம், மத்திய அரசால் எடுக்கப்பட்ட சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்றுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது. நூறு சதவிகித இடங்களைப் பொதுப் பிரிவு, இடஒதுக்கீட்டுப் பிரிவு என இல்லாமல், நூறு சதவிகிதத்தையும் தொகுப்பு இடஒதுக்கீடாக அனைத்து பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்தளிக்க வேண்டும்” என்றார்.

'பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்த அன்சாரி பேசுகையில், “ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கை அனைத்து துறைகளிலும் 10% இடங்கள் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால், நிலைமை அவ்வாறில்லை. ரா(RAW), உளவுத்துறை உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் சேர்க்கப்படுவதே இல்லை. ராணுவத்திலும் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் மிகச் சொற்பமான அளவில்தான் இருக்கிறது. இந்த கமிட்டியின் அறிக்கைகள் வெறும் இடஒதுக்கீடு என்றில்லாமல் சிறுபான்மையினர் வசிக்கின்ற பகுதிகளில் உரிய உள்கட்டமைப்பு வசதிகள், சமூகப் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றையும் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது” என்றார்.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு பழ நெடுமாறன்

தாவூத் மியாத் கான் பேசுகையில், “தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு என இருக்கிற 3.5% இடஒதுக்கீடு கல்வி ரீதியில் சில நன்மைகள் கொடுத்தாலும், ஒட்டுமொத்த அளவில் அது பாதகமாகவே அமைந்துள்ளது. போதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது தடைபட்டுள்ளது. எனவே, வெறும் கண் துடைப்பாக மட்டுமில்லாமல் உரிய முறையில் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், “ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சார் கமிட்டியை அமைத்த அரசு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்தாலும் பிந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது ஜனநாயகக் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து தவறினால், அது ஜனநாயக ரீதியிலான அரசாக இருக்க முடியாது” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களைப் போலவே சிறுபான்மையினருக்கும் உரிய இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும். மதம் மாறிய மக்களையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, பௌத்தம் மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டனர். தமிழகத்தில் அதிக அளவில் இல்லையென்றாலும் வட இந்தியாவில் தலித் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் கிறிஸ்துவர்கள் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். அதுவேதான் ராஜேந்திர சச்சார் அறிக்கையிலும் கூறப்பட்டிருக்கிறது” என்றார்.

இறுதியாக மத சிறுபான்மையினருக்கு மத்திய அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


டிரெண்டிங் @ விகடன்