ஒளிரும் இந்தியாவின் இருண்ட கிராமம்... திண்டுக்கல் ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!

இந்தியாவில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை எனப் பிரதமர் மோடி மேடைக்கு மேடை முழங்கி வருகிறார். ஆனால், மின்சார வசதி இல்லாத பல கிராமங்கள் இந்தியாவில் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை அருகே உள்ள அமைதிச்சோலை கிராமம் சுதந்திர இந்தியாவின் இருண்ட கிராமமாகவே இருக்கிறது.

இருண்ட கிராமம்

மின்சார வசதி இல்லாத தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதியை ஏற்படுத்தித் தருமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர் அமைதிச்சோலை கிராம மக்கள். இது தொடர்பாகப் பேசிய அமைதிச்சோலையைச் சேர்ந்த விருமாண்டி, ``பன்றிமலை பேரூராட்சி ஒன்பதாவது வார்டுல எங்க ஊரு இருக்கு. 120 குடும்பத்துக்கும் மேலே வசிக்கிறோம். அத்துவான காட்டுல கரன்ட் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறோம். சுதந்திரம் வாங்கி இத்தனை வருஷம் ஆகியும் எங்களுக்கு கரன்ட் கிடைக்கல. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால சோலார் லைட் போட்டுக் கொடுத்தாங்க. ஆனா, அது சரியா இல்லை. அதை முறையா பராமரிக்க முடியல. வச்சு கொடுத்துட்டுப் போனதோட சரி அதிகாரிகளும் கண்டுக்கல. இந்தியா ஒளிருது ஒளிருதுன்னு சொல்றாங்க. ஆனா, எங்க கிராமம் இன்னும் இருட்டுல தாங்க இருக்கு. அதனால அதிகாரிகள் மனசு வெச்சு எங்களுக்கு கரன்ட் வசதி செஞ்சுக்கொடுக்கணும். எங்க ஊருக்கு ரேஷன் கடை இல்லை. குடிநீர் வசதி இல்லை. பள்ளிக்கூடம் இல்லை. இப்படி அடிப்படை வசதி எதுவுமே இல்லாமதான் நாங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம். பெரும்பாலும் விவசாயக் கூலி வேலைக்குதான் போறோம். பிள்ளைங்க 20 கிலோமீட்டர் நடந்து தர்மத்துபட்டி போய்தான் படிக்கிறாங்க. ரேஷன் வாங்க 10 கிலோமீட்டர் போகணும். எங்க கஷ்டத்த கவர்மென்ட் புரிஞ்சுகிட்டு அடிப்படை வசதிகளை செஞ்சுக்கொடுக்கணும். இதுவரைக்கும் பலமுறை மனு கொடுத்திருக்கோம். ஆனாலும் கரண்டு வந்தபாடில்லை. இந்த முறையாவது வருமான்னு பார்க்கலாம்" என்றார் எதிர்பார்ப்புடன்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தும் இவர்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. தற்போது வனத்துறையினர் ஆட்சேபம் தெரிவிப்பதால் மின்சாரம் தரமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தற்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் தின்டுக்கல் சீனிவாசன் இந்த விஷயத்தில் தலையிட்டு அனுமதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பதே இந்த மக்களின் எதிர்பார்ப்பு. இருளில் தவிக்கும் இந்த மலைக்கிராமத்துக்கு ஒளிகிடைக்க வழி செய்யுங்கள் அமைச்சரே...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!