வெளியிடப்பட்ட நேரம்: 03:49 (07/08/2018)

கடைசி தொடர்பு:07:40 (07/08/2018)

தூத்துக்குடியில் குளத்து நீரில் ஆசிட் கலந்த மர்ம நபர்கள்..! மீன்கள் செத்து மிதந்த பரிதாபம்

தூத்துக்குடி பேய்க்குளத்தில் நள்ளிரவில் ஆசிட் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி பேய்க்குளத்தில் ஆசிட் கலந்ததால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் பாசனத்தின் 12 மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு சாயர்புரம், சேர்வைக்காரன்மடம், சிவத்தையாபுரம், இருவப்பபுரம், கோரம்பள்ளம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயப் பயன்பாட்டுக்காகச் செல்லும். இதன் மூலம் நெல், வாழை ஆகியவை பயிரிடப்பட்டு வருகின்றன. சாகுபடிக்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

விவசாயிகள்  தங்களது விளைநிலங்களில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று இருவப்பபுரம் கிராமம் அருகிலுள்ள பேய்க்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. தண்ணீரும் துர்நாற்றத்துடன் காணப்பட்டது. இக்குளத்தில் உள்ள பாலத்தில் இருந்து ஆசிட்டை தண்ணீருக்குள் மர்ம நபர்கள் கொட்டியிருப்பது தெரியவந்தது. பாலத்தின் மீது சிதறிக் கிடந்த ஆசிட்டை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர். உடனடியாக, இதனால், 8-வது, 9-வது, 10-வது மற்றும் 11-வது மதகுகள் அடைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசினோம், ``ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் பெரிய குளம் இந்தப் பேய்க்குளம்தான். இந்த குளத்து தண்ணீர் மூலம் பலநூறு ஏக்கர் பரப்பளவில் நெல், வாழைகள் சாகுபடி செய்துட்டு வர்றோம். தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்த இந்தக் குளத்தில், கோடைகாலத்துக்குப் பிறகு இப்போ கொஞ்ச நாளாத்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாய வேலைகளை தீவிரப்படுத்தினோம். காலையில் குளத்துல மீன்கள் செத்து மிதந்துச்சு. குளத்துல இருந்து பாசனத்துக்காக வயல்களில் விடப்படும் தண்ணீருலயும் மீன்கள் மிதந்துச்சு. பாலத்தின் ஓரத்தில் பச்சை நிறத்துல ஆசிட் தேங்கி கிடந்துச்சு. இதனால் குளத்துக்கரை முழுவதும் ஆசிட் துர்நாற்றம் வீசியது. 

இரவு நேரங்களில் லாரியை பாலத்தின் ஓரத்தில் நிறுத்தி ஆசிட்டை கொட்டியிருக்கலாம்னு நினைக்கிறோம். இந்தக் கிராமத்துல இருந்து பெரிய ஊரான ஏரல் பகுதிக்கு போகுறதுக்கு இதுதான் ஒரே வழி. கிராமப்பகுதி என்பதால் அதிகப் போக்குவரத்து கிடையாது. அதனால, இந்தப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்., அல்லது பெரிய கடைகள், வீடுகளில் வைத்திருக்கும் சி.சி.டி,வி கேமராக்களில் பார்த்தாலே இந்த தவறை செய்தது யாருன்னு கண்டுபிடிச்சிடலாம். விவசாயப் பாசனத்துக்காகப் பயன்படுத்திட்டு வர்ற தண்ணீரில் ஆசிட்டை கலந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். குளத்து நீரில் ஆசிட் கலந்துள்ளதால் பாசனத்துக்கு இதைப் பயன்படுத்த முடியாததால் அப்பகுதி விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க