8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக தடையை மீறி மனித சங்கிலிப் போராட்டம்..! 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டத்தை அடுத்து தடையை மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்படப் போவதாக அறிவித்தார்கள்.

அதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அப்பகுதிக்கு வந்த விவசாயிகள் ``வேண்டாம்... வேண்டாம்... 8 வழிச் சாலை வேண்டாம். விடமாட்டோம்... விடமாட்டோம்... 8 வழிச் சாலையைப் போட விடமாட்டோம்'' என்ற முழக்கத்தோடு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி மண்டபத்துக்கு கொண்டு சென்றார்கள்.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இந்திரஜித், ``சுதந்திரப் போராட்டத்தில் கூட இவ்வளவு பெரிய அடக்குமுறைகள் இருந்ததில்லை. அறவழியில் போராட்டம் நடத்தக் கூட சுதந்திர நாட்டில் அனுமதி இல்லை. சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை 270 கி.மீட்டர் போடப்பட இருக்கிறது. இதில் 250 கி.மீட்டர் வனப்பகுதிகளும், குன்று, மலைகளும் இருக்கிறது. அதற்கு அடுத்து 7,500 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் அதிகப்படியாக இருக்கிறது. இதையெல்லாம் அழித்து 8 வழிச் சாலை போடப் போகிறார்கள். இது மக்களுக்கு விரோதமான திட்டம். இந்தத் திட்டத்தை மக்கள் யாரும் வரவேற்கவில்லை. 10,000 கோடியில் போடப்படும் 8 வழிச் சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 4,000 கோடி கமிஷன் என்பதால் அவர் இத்திட்டத்தை வரவேற்கிறார். இந்தத் திட்டத்தை எந்தக் காலத்திலும் நிறைவேற்ற முடியாது. இதனால் இயற்கை அழிக்கப்படுவதோடு மனிதர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!