வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (07/08/2018)

கடைசி தொடர்பு:07:13 (07/08/2018)

பெரு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்! - தமிழக அரசுக்கு கோரிக்கை

பெரு விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். இந்த வழக்கினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், 'தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது 6,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். ஆனால், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது என அப்பொழுது தமிழக அரசு அறிவித்தது. அதை எதிர்த்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உயர் நீதிமன்ற  மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. 

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடைபெற்றது. நீண்ட நாள்களாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள என்னைப் போன்ற விவசாயிகள் 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால், சாகுபடி செய்ய பயிர்க்கடன் கிடைக்கவில்லை. பழைய கடன் நிலுவையில் இருப்பதால் வங்கிகளில் பயிர்க் கடன் தர மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தொகை வெறும் 1,930 கோடி ரூபாய்தான். தமிழக அரசுக்கு இது பெரிய தொகையே அல்ல. தமிழக அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டுக்கு சுமார் 3,00,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. மற்ற துறையினருக்கெல்லாம் ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 1,930 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை' என ஆதங்கப்பட்டார்.