வெளியிடப்பட்ட நேரம்: 04:27 (07/08/2018)

கடைசி தொடர்பு:07:08 (07/08/2018)

அறிவாலயம் போகலாம் வாங்க..! சென்னை தெருக்களில் ஒலிக்கும் தொண்டர்களின் கோஷங்கள்


காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக வெளியான அறிக்கையால், தி.மு.க தொண்டர்கள் மீண்டும் சோர்வில் மூழ்கி விட்டனர். 'முதுமை காரணமாக, கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலான பணியாக இருக்கிறது' என்று காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்த் செல்வராஜ், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அறிக்கையால், சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களைச் சேர்ந்த தி.மு.கவினரும், சென்னை தி.மு.க தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். 'கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான், இப்போது அது சரி செய்யப்பட்டு விட்டது' என்று கடந்த மாதம் 29-ம் தேதி ஆ.ராசா சொன்னது போல, நம்பிக்கை தரும் வார்த்தைகளை எதிர்பார்த்து தொண்டர்களின் கண்கள் நேற்றிரவு முழுவதும் பரபரத்தன. பேராசிரியர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, பொன்முடி உள்ளிட்ட முக்கியமான நபர்கள் மருத்துவமனைக்கு வருவதும், போவதுமாக இருந்தது தொண்டர்களை, தொடர்ந்து பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.

காவேரி மருத்துவமனை வாசலில்

அதேபோல், நிதின்கட்கரி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்து விட்டுச் சென்றனர். தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர், தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாகப் வெளியான தகவலும் தொண்டர்களின் கண்ணீரை அதிகமாக்கி இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டக் களங்களில் கோரஸ் குரல் கொடுத்து உரிமைக்காக குரல் கொடுப்பதுபோல், தி.மு.க-வினர் கோஷம் எழுப்பியபடி இருக்கின்றனர். ``வாங்கப்பா, வாங்கப்பா அறிவாலயம் வாங்கப்பா. போலாம்ப்பா, போலாம்ப்பா அறிவாலயம் போலாம்ப்பா. விடமாட்டோம், விடமாட்டோம், அய்யாவை விடமாட்டோம். தரமாட்டோம், தரமாட்டோம், அய்யாவை நாங்கள் தரமாட்டோம். முடியலே, முடியலே வேதனையைத் தாங்க முடியலே. காட்டுங்க, காட்டுங்க, கலைஞர் அய்யா முகத்தைக் காட்டுங்க" என்ற அவர்களின் கோஷம் ஆழ்வார்பேட்டையைக் கடந்து, சென்னை நகரப் பேட்டைகளில் எதிரொலிக்கிறது.