`மலர் கிரீடம், வீரவாளுடன் சிறை வாசலில் ராக்கெட் ராஜாவுக்கு வரவேற்பு..!' கோவையை அதகளப்படுத்திய ஆதரவாளர்கள்

ராக்கெட் ராஜா

நெல்லை பேராசிரியர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராக்கெட் ராஜா இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் செய்த அட்ராசிட்டியில் கோவை அதிர்ந்தது.

கடந்த, பிப்ரவரி மாதம் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பேராசிரியர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நாடார் மக்கள் சக்தி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை கடந்த மே மாதம் சென்னையில் வைத்து கைதுசெய்தது காவல்துறை. இந்த வழக்கில், கடந்த மூன்று மாதமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராக்கெட் ராஜாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. காலை, மாலை என இருவேளையும்  மும்பையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு சிறையிலிருந்து இன்று வெளியே வந்த ராக்கெட் ராஜாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு என்கிற பெயரில் சிறை வளாகத்தை அதகளப்படுத்தினர்.

நேற்று காலையிலேயே ராக்கெட் ராஜா வெளியே வருவார் என்ற அறிவிப்பு வெளியானதால் அவருடைய ஆதரவாளர்கள் கோவை மத்தியச் சிறை வளாகம் முன்பு மையம் கொண்டார்கள். அவர் ஒவ்வொருவருக்கும் 'நாடார் மக்கள் சக்தி" அமைப்பின் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. ராக்கெட் ராஜாவின் எதிராளிகள் உள்ளே புகுந்து ஏதேனும் களேபரம் ஆவிடக்கூடாது என்பதற்காக அவர்களே இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள். கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸாரும் அவர்களுக்குப் பக்கபலமாக நின்று பாதுகாப்பு வழங்கியது. அந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் உரிய விசாரணைக்குப் பின்னரே சிறை வளாகத்தின் முன்பு அனுமதிக்கப்பட்டார்கள். கோவை நகரம் முழுக்க ராக்கெட் ராஜாவுக்கு விதவிதமான வசனங்கள் கொண்ட வரவேற்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன.

ஆனால், மாலை 5 மணி வரை ராக்கெட் ராஜாவை சிறை நிர்வாகம் வெளியே அனுப்பவில்லை. காலையிருந்து மாலைவரை கால்கடுக்க நின்ற அவரது ஆதரவாளர்கள் துவண்டு போய்விட்டார்கள். சுமார் 6 மணியளவில் சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார் ராக்கெட் ராஜா.

பயங்கர கோஷத்துடன் ஆள் உயர மாலையையும் மலர் கிரீடத்தையும் ராக்கெட் ராஜாவுக்கு அணிவித்து ஆராவராம் செய்த அவரது  ஆதரவாளர்கள் வீரவாள் பரிசளித்து முழக்கமிட்டார்கள். அத்தனை ஆரவாரங்களையும் அமைதியாய் வேடிக்கப் பார்த்தது போலீஸ். பின்னர் அங்கிருந்து ஏர்ப்போர்ட்டை நோக்கிச் சென்றது ராக்கெட் ராஜாவின் கார். ஏர்போர்ட் சென்றடையும் வரை சாலை நெடுக ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் கோஷமெழுப்பிக் கொண்டே சென்றார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!