அலெர்ட்... தமிழ்நாட்டில் 11 போலித் தொழில்நுட்பக் கல்லூரிகள்!

இந்த விளம்பரங்களுக்குப் பின்னால் பல நூறு கோடி ரூபாய் வியாபாரம் நடந்துவருகிறது. பல படிப்பு மையங்கள், பணம் வசூலிக்கும் நிலையங்களாக மட்டுமே செயல்படுகின்றன.

அலெர்ட்... தமிழ்நாட்டில் 11 போலித் தொழில்நுட்பக் கல்லூரிகள்!

`அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டின் மூலம் பலரும் பணம் கொடுத்துப் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்' என்ற அதிர்ச்சியான செய்தி வெளியானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், `தமிழ்நாட்டில் 11 போலித் தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் 277 போலித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளன' என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி கல்லூரிகள்

பல்கலைக்கழகத்தில் முறையான அனுமதி பெற்று, கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பல இடங்களில், `கல்லூரிக்குச் செல்லாமலேயே டிகிரி வாங்க வேண்டுமா, மூன்று வருடப் பட்டப்படிப்பை ஓராண்டிலேயே முடித்துவிடலாம். ஓராண்டிலேயே ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ டிகிரி! முனைவர் பட்டம் வேண்டுமா, பொறியியல் படிப்பில் பட்டம் பெற வேண்டுமா, படித்துக்கொண்டே 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்' என ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. கல்லூரிக்குச் சென்று படிப்பதற்குப் பதிலாக, வேலைசெய்துகொண்டே டிகிரி வாங்கிவிடலாம் என்ற மாயவலையில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 

இந்த விளம்பரங்களுக்குப் பின்னால் பல நூறு கோடி ரூபாய் வியாபாரம் நடந்துவருகிறது. பல படிப்பு மையங்கள், பணம் வசூலிக்கும் நிலையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. வேலையில் இருப்பவர்களும், மேற்கொண்டு கல்லூரியில் சென்று படிக்க முடியாதவர்களும் இந்தக் கல்வி மையங்களை அணுகிக் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் சேர்கின்றனர். தொலைதூரக் கல்வி மையங்களாகச் செயல்படுபவர்கள், பல்கலைக்கழகங்களின் உயர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்துப் பல இடங்களில் மையங்களைத் தொடங்கியுள்ளனர். இதைத் தடுக்கும்விதத்தில் பல்கலைக்கழக மானியக்குழு, பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்திருக்கிறது. 

போலி படிப்புகள்

தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்குப் பிறகு, குறிப்பிட்ட அளவு தர மதிப்பீடுகளைக்கொண்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைதூரக் கல்வி வழங்க வேண்டும் என்று விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது பல்கலை மானியக் குழு. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே தொலைதூரக் கல்வியைத் தரும் தகுதியைப் பெற்றுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, குறிப்பிட்ட காலத்துக்குச் சேர்க்கை நடத்த அனுமதி பெற்றுள்ளது. 

படிப்பு மையங்களே தங்களை `கல்லூரி' என்றும், `பல்கலைக்கழகங்கள்' என்றும் விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி ஏராளமானவர்கள் பணம் செலுத்தி பட்டம் பெறுவதும் நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒருவருக்கு, ஆசிரியர் பணி வழங்காமல் திருப்பி அனுப்பியது  தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB).

இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார் பாதிக்கப்பட்டவர். ஆசிரியர் தேர்வு வாரியம், `விண்ணப்பதாரர் மூன்று வருடப் பட்டப்படிப்பை தனியார் மையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளிலேயே படித்து முடித்திருக்கிறார். இதனால் வேலைவாய்ப்பை வழங்க முடியாது' என்று வாதிட்டது. இதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, `பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பட்டப்படிப்பை முடிக்காததால் வேலைவாய்ப்பு வழங்காதது சரியான முடிவுதான்' என அறிவித்தது. ஆகையால், தவறான முறையில் பட்டப்படிப்பை முடிக்க விரும்புகிறவர்கள் மேற்கண்ட உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய தீர்ப்பைக் கவனிப்பது அவசியம். 

`தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 11 கல்லூரிகள் போலியானவை' என, நாடாளுமன்றத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவை எந்தக் கல்லூரிகள் என்பதை விசாரித்தோம். அந்த 11 கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகள் அல்ல, மேலாண்மை வழங்கும் கல்லூரிகள் எனத் தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள ICFAI கல்வி நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் போலிக் கல்வி நிறுவனங்களில் இடம்பிடிக்கிறது. 

கல்லூரிகள்

கல்லூரிகள்

பல கல்வி நிறுவனங்கள், தங்களுடைய நிறுவனத்தின் பெயரில் Business & Management என இணைத்து கல்வி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளன, மேலும், பல கல்வி நிறுவனங்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பெயரிலும், பிசினஸ் ஸ்கூல்களின் பெயரிலும் இயங்கிவருகின்றன. இன்னும் சில இடங்களில் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பகுதிநேரப் பொறியியல் படிப்பை வழங்குவதாக மாணவர்களின் சேர்க்கை நடத்திவருகிறது. இதுகுறித்தும், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்றிருக்கிறதா என்பதையும் விசாரித்துச் சேர வேண்டும். மாணவர்கள் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!