`அந்த 48 மணி நேரம்... டமில் தெரியாது... ஒன்லி தெலுங்கு' - போலீஸுக்கு அல்வா கொடுத்த பெண் கஞ்சா வியாபாரி | Women ganja seller escaped from police

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (07/08/2018)

கடைசி தொடர்பு:13:36 (07/08/2018)

`அந்த 48 மணி நேரம்... டமில் தெரியாது... ஒன்லி தெலுங்கு' - போலீஸுக்கு அல்வா கொடுத்த பெண் கஞ்சா வியாபாரி

சென்னையில் கஞ்சா சூட்கேசுடன் இரண்டு முறை போலீஸாரிடம் சிக்கிய டிப்டாப் உடையணிந்த பெண் கஞ்சா வியாபாரி தப்பிய கதை ருசிகரமானது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். 

சென்னை போரூர் சிக்னல் ஆற்காடு சாலையில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் வைத்திருந்த சூட்கேஸை சிலர் பறிக்க முயன்றனர். அவர்களுடன் இளம்பெண் போராடினார். அதைப்பார்த்த பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை மீட்டனர். இந்தத் தகராறில் இளம்பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத்தின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துராஜா, இளம்பெண்ணிடம் விசாரித்தார். விசாரணையில் அவரின் பெயர் ரேணுகா, ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. சூட்கேஸை திறந்துப்பார்த்தபோது போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. உடனடியாக ரேணுகாவிடம் போலீஸார் கஞ்சா குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆந்திராவைச் சேர்ந்த ரேணுகாவுக்கு வயது 23. ஒரு வழக்கில் கைதான இவர், விஜயவாடா சிறையில் சில ஆண்டுக்கு முன்பு அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற கஞ்சா வியாபாரியும் விஜயவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் ஆந்திரா சிறையில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளியில் வந்த ரேணுகாவை அவரின் குடும்பத்தினர் சேர்க்கவில்லை. இதனால், அவருக்கு முத்துலட்சமி அடைக்கலம் கொடுத்து சென்னைக்கு அழைத்து வந்தார். செம்மஞ்சேரியில் இருவரும் ஒரே வீட்டில் தங்கினர். 

கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி, அந்தத் தொழிலில் ரேணுகாவை ஈடுபடுத்தினார். ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு வருவதே ரேணுகாவின் வேலை. இதற்காக அடிக்கடி ஆந்திராவுக்குச் சென்றார். கஞ்சா வியாபாரத்தில் கைநிறைய பணம் கிடைத்த ரேணுகா, தன்னுடைய மனம்போல வாழ்ந்தார். அப்போதுதான் பிரபல கஞ்சா வியாபாரியான தேவசகாயத்துடன் ரேணுகாவுக்கு காதல் மலர்ந்தது. இருவருக்கும் முத்துலட்சுமி முன்னிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஆனால், ரேணுகாவின் நடவடிக்கைகள் தேவசகாயத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால், மனைவியை விட்டுப் பிரிந்தார். 

இதனால் தேவசகாயத்துக்குப் போட்டியாக ரேணுகா கஞ்சா தொழிலில் ஈடுபட்டார். சென்னையில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப்பறந்த நிர்மல்குமார் என்பவருடன் ரேணுகா பழகினார். இது தேவசகாயத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால் ரேணுகாவுக்கு பலவகையில் தொல்லை கொடுத்தார். முத்துலட்சுமியின் தயவால் ரேணுகா கஞ்சா பிசினஸ் செய்துவந்தார். கடந்த 4-ம் தேதி ஆந்திராவில் கஞ்சாவை வாங்கிய ரேணுகா, அதை சூட்கேஸில் வைத்துக்கொண்டு சொகுசு பஸ் மூலம் சென்னை செம்மஞ்சேரி வந்தார். அப்போது ஒரு மர்மக்கும்பல் ரேணுகாவை கடத்த முயற்சி செய்தது. இதுதொடர்பாக அவர், செம்மஞ்சேரி போலீஸில் தன் கணவர் மீது புகார் கொடுத்தார். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலைத் தேடிவருகின்றனர். செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திலிருந்து நிர்மல்குமாரைச் சந்திக்க ஆட்டோ மூலம் போரூர் பகுதிக்கு வந்தார். அவரைப் பின்தொடர்ந்த கடத்தல் கும்பல் மீண்டும் அவரிடம் தகராறு செய்துள்ளது. அவரிடமிருந்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து அவரையும் சிறையில் அடைத்துள்ளோம். ரேணுகாவை கடத்த முயன்றவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர். 

 

போலீஸாரிடம் சிக்கிய ரேணுகா, ``சிறுவயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக என்னுடைய வாழ்க்கை திசைமாறிவிட்டது. ஆந்திரா போலீஸாரிடம் பாலியல் வழக்கில் சிக்கினேன். பிறகு முத்துலட்சுமியுடன் சேர்ந்து கஞ்சா தொழிலில் ஈடுபட்டேன். அப்போதுதான் தேவசகாயத்தை காதலித்து திருமணம் செய்தேன்.  என்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக சென்றது. ஆனால், தேவசகாயத்தைப் பிரிந்து தனியாக கஞ்சா தொழில் செய்தபோதுதான் பல சிக்கல்களைச் சந்தித்தேன். அது, எனக்கு வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கஞ்சா கடத்திவரும்போது இந்தத் தொழிலை விட்டுவிட்டு திருந்திவிடலாம் என்று தோன்றும். ஆனால், கையில் பணம் கிடைத்தவுடன் மனம்மாறிவிடும். இந்தச் சமுதாயத்தில் என் மீதான பார்வை வேறுவிதமாகவே அமைந்துவிட்டது. இனி நான் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது" என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா எடுத்துவர 5,000 ரூபாய் வரை கிடைக்கும் என்று ரேணுகா விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு அவர் வரை படித்துள்ளார். ஆனால், எங்களிடம் பி.டெக்,  எம்.பில் என்று முதலில் பொய்சொன்னார். விசாரணையில்தான் அவர் பத்தாம் வகுப்புகூட பாஸாகவில்லை என்று தெரிந்தது. குடும்பத்தைப் பிரிந்த அவர், சென்னையில் முத்துலட்சுமியுடன் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார். பிரபல கஞ்சா வியாபாரி தேவசகாயத்துடன் சிறிது காலம் வாழ்ந்துள்ளார். கஞ்சா கடத்தலின் முக்கியப்புள்ளி ஒருவர்தான் ரேணுகாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவரைத் தேடிவருகிறோம்" என்றார். 

 அந்த 48 மணி நேரம் 

ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்த ரேணுகா, டிப்டாப் உடையணிந்து செல்வதுண்டு. பெண் என்பதால் அவர் மீது போலீஸாருக்கு எந்தவித சந்தேகமும் வருவதில்லை. சொகுசு பஸ்சில்தான் வரும் ரேணுகா, சூட்கேஸில் கஞ்சா வைத்திருப்பதால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.  இதனால்தான் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு கஞ்சா சூட்கேசுடன் சென்ற ரேணுகா மீது போலீஸாருக்கு சந்தேகம் வரவில்லை. அங்கு அவர் டமில் தெரியாது  என்றும் தெலுங்கு மட்டுமே தெரியும் என்று சொல்லியுள்ளார்.  அடுத்து போரூர் சிக்னல் பகுதியில் அவர் தாக்கப்பட்டபோது  எஸ்.ஆர்.எம்.சி.போலீஸார் மருத்துவமனைக்கு வந்து ரேணுகாவிடம் விசாரித்துள்ளனர். அப்போதும் போலீஸார். கஞ்சா சூட்கேஸை திறந்துப்பார்க்கவில்லை. இரண்டு முறை போலீஸாரிடம் சிக்கியும் ரேணுகா, ஒரு கஞ்சா வியாபாரி என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 48 மணி நேரமாக அவர் கஞ்சா சூட்கேசுடன் சென்னையில் பல இடங்கள் சுற்றிவந்துள்ளார். வளசரவாக்கம் போலீஸாரின் கிடுக்குப்பிடி கேள்விகளில் ரேணுகா சிக்கிக்கொண்டார்.