அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்! 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கவிதா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ‘சோமாஸ் கந்தர்’ சிலை பழுதடைந்ததால், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்தச் சிலையில் அறநிலையத்துறை குறிப்பிட்ட 5 சதவிகித தங்கம்கூட கலக்கப்படவில்லை என்று பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் சிலை செய்வதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக இவ்விவகாரத்தில் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கடந்த 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். 

சிலை செய்வதற்கு 5,00,000 ரூபாய் பணம் கவிதாவிடம் கொடுத்திருப்பதாகக் கோயில் அர்ச்சகர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாவின் மனுவைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. `திருச்சியில் 30 நாள்கள் தங்கியிருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாள்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் தேவைப்படும்போது கும்பகோணத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன் ஆஜராக வேண்டும்" உள்ளிட்ட நிபந்தனைகள் கவிதாவுக்கு விதிக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!