`எங்கள் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது' - வாகன உரிமையாளர்கள் கொந்தளிப்பு

வாகன உரிமையாளர்கள் போராட்டம்

``புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தால் எங்கள் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது'' என்று போராட்டத்தில் வாகன உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து சேலம் அம்மாப்பேட்டை புறநகர் பகுதியில் சேலம் மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டம் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் நடத்தப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கலந்துகொண்டார்கள்.

அன்பழகன்இதுபற்றி சேலம்  மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் பொருளாளர் அன்பழகன் கூறுகையில், ``மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா வாகன உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் முரண்பாடாக இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் முழுத் தொகையும் காப்பீடு நிறுவனங்கள் கட்டி வருகிறது. ஆனால், இந்தப் புதிய சட்டத் திருத்த மசோதாபடி பாதித் தொகை காப்பீடு நிறுவனமும், பாதி தொகை வாகன உரிமையாளரும் கட்ட வலியுறுத்தி இருக்கிறார்கள். உயிரிழப்பு செய்த ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு அவருக்கு கட்டாயம் 3 மாத சிறைத் தண்டனையும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர். ஒரு வழிப்பாதையில் சென்றால் அவர்களுக்கு எந்தவொரு இழப்பீடும் கொடுக்க முடியாது என்று கூறி இருக்கிறார்கள்.

இதனால் டிராவல்ஸ் தொழில் செய்ய முடியாத அளவுக்கு எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்குகிறார்கள். இந்தப் புதிய சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத அளவுக்கு அம்மாப்பேட்டை புறநகர் பகுதியில் எங்கள் போராட்டத்தை அறவழியில் நடத்தி இருக்கிறோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!