பட்டினப்பாக்கம் சாலையை பதறவைத்த சொகுசு கார் - 'பென்ஸ்' ரீகனால் உயிரிழந்த இரண்டு பேர் 

விபத்தில் சிக்கிய கார்

 சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் தாறுமாறாகச் சென்ற சொகுசு கார் மோதி இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். 

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் நேற்று மாலை 4.30 மணியளவில் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது மின்னல் வேகத்தில் சொகுசு கார் ஒன்று அவ்வழியாகச் சென்றது. சாலையில் தாறுமாறாக ஓடிய கார், வாகனங்களில் சென்றவர்களை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அவ்வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தக் காருக்கு வழிவிட்டு சிலர் ஒதுங்கினர். இறுதியில் அந்த சொகுசு கார், மூன்று மோட்டார் சைக்கிள்கள், ஒரு மினி லாரி ஆகியவற்றை இடித்துத் தள்ளியதோடு தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் பொதுமக்கள் விரைந்து சென்று சொகுசு காரிலிருந்த டிரைவரை சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் அங்கு வந்து அவரை மீட்டனர். விசாரணையில் அவரின் பெயர் பென்ஸ் ரீகன் என்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்றும் தெரியவந்தது. மேலும், அவர் குடிபோதையில் இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரீகனை சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி விபத்து ஏற்படுத்தியதில் மயிலாப்பூரைச் சேர்ந்த அருண்பிரகாஷ், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளையராஜா, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த மார்கேஷ், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அமீர்ஷாஜகான், அபுதாஹீர் ஆகிய ஆறுபேர் படுகாயமடைந்தனர். அதில் அமீர்ஷாஜகான், அபுதாஹீர் ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்'' என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!