வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (07/08/2018)

கடைசி தொடர்பு:15:23 (07/08/2018)

உடல்களில் காயங்கள்... சிதைக்கப்பட்ட முகங்கள் - ஆந்திரா காட்டில் கிடந்த காஞ்சி ரவுடிகள்!

ரவுடிகள் சடலம் கிடந்த வனப்பகுதி

தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை வனப்பகுதியில் இரண்டு ரவுடிகள் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த செங்கரை பகுதியில் காட்டுச் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த வனப்பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக ஊத்துக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னி மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் விக்கி என்ற விக்னேஷ், சத்யா என்று தெரியவந்தது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆள்நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடிகள் எப்படி வந்தார்கள் என்று விசாரித்துவருகிறோம். இறந்து கிடந்த ரவுடிகளின் சடலம் அழுகிய நிலையில் உள்ளது. இதனால் அவர்கள் இறந்து சில நாள்களாகியிருக்கும் என்று கருதுகிறோம். ரவுடிகளுக்கிடையே நடந்த மோதலில் அவர்கள் இறந்தார்களா அல்லது இறந்தவர்களின் எதிரிகள் கொலை செய்து சடலத்தை இங்கு வீசிவிட்டுச் சென்றார்களா என்று விசாரித்துவருகிறோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``இறந்து கிடந்த இரண்டு ரவுடிகளும் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களில் ஆங்காங்கே காயங்கள் உள்ளன. ஒரு ரவுடியின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. இரண்டு சடலங்களும் தனித்தனியாகக் கிடந்தன. அதில் ஒருவரின் சடலம் தலைகுப்புறக் கிடந்தது. பிரேத பரிசோதனையின் முடிவில்தான் அவர்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும். ரவுடிகள் விக்கி, உதயா மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்குகள் உள்ளன. அவர்களின் எதிரிகள் யார் என்று விசாரித்துவருகிறோம்" என்றார்.