வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (07/08/2018)

'18 எம்.எல்.ஏ-க்களின் செயல்' அரசியல் ஒழுக்கக்கேடு - சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் தரப்பு வாதம்!

`` 'முதல்வர்மீது நம்பிக்கையில்லை' என ஆளுநரிடம் புகாரளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் செயல், அரசியல் ஒழுக்கக்கேடு'' என சென்னை  உயர் நீதிமன்றத்தில் முதல்வர் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்


18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு ஆறாவது நாளாக விசாரணை நடந்தது. முதல்வர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் இரண்டாவது நாளாக வாதிட்டார். அப்போது அவர்,  தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.      ஏ-க்களும் தாக்கல்செய்துள்ள மனுவில், பல இடங்களில் முதல்வரை குறிப்பிடும்போது, தங்களது கட்சியைச் சேர்ந்த முதல்வர் எனவும், தங்களது கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால், அவர்கள் தனி இயக்கமாகவோ,  தனி அணியாகவோ கருதமுடியாது எனத் தெரிவித்தார். இதன்மூலம், அவர்களைத் தகுதிநீக்கம்செய்தது  சரியே என்றும் வாதிட்டார்.

கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருந்த காலத்தில், அ.தி.மு.க என்ற கட்சியே இல்லை எனக் கூறிவிட முடியாது எனவும் தெரிவித்தார். தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகார வரம்பு இல்லாவிட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், ஆளுநரிடம் புகார் மனு அளித்த 18 எம்.எல்.ஏ-க்களின் நடத்தை, அரசியல் ஒழுக்கக்கேடு மட்டுமல்லாமல், முறையற்ற செயலும்கூட என முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். அவரது வாதம் நாளையும் தொடர்கிறது.