வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/08/2018)

கடைசி தொடர்பு:18:00 (07/08/2018)

குரங்கணியில் மீண்டும் காட்டுத்தீ!

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தடைவிதித்தது. இந்நிலையில், குரங்கணி அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குரங்கணி

குரங்கணி அருகே உள்ள கொம்புதூக்கி ஐயனார் கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதை அருகில் உள்ள காரிப்பட்டி கிராமத்தினர் மற்றும் குரங்கணி சாலையில் சென்றவர்கள் பார்த்து, வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

குரங்கணியில் காட்டுத் தீ

காலை முதல் இப்போதுவரை முயன்றும் வனத்துறையினரால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக வீசும் காற்று காரணமாக தீ, மேலும் பரவி வருகிறது. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், காலை முதல் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், இப்போதுவரை சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் தீயைக் கட்டுப்படுத்திவருகின்றனர். தற்போது போடியில் மழை பெய்து வருகிறது. அந்த மழை குரங்கணி பக்கம் வந்தால் நன்றாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.