வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (07/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (07/08/2018)

`கருணாநிதிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்' - கண்ணீருடன் காத்திருக்கும் 80 வயது முதியவர்!

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், 80 வயது முதியவர் ஒருவர் காவேரி மருத்துவமனையில் கண்ணீருடன் காத்திருக்கிறார்.

காவேரி மருத்துவமனை


தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் ரத்த அழுத்தம் காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அந்த மருத்துவமனையைச் சுற்றி தொண்டர்கள் குவிந்தனர். `தலைவா! எழுந்து வா!' என்ற கோஷங்களுடன் இரவு பகலாக அங்கேயே முகாமிட்டுள்ளனர். கவலை தோய்ந்த முகங்களுடன் காட்சியளிக்கும் அவர்கள் சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்துள்ளனர். பெண்கள் குழந்தைகளுடன் காட்சியளிக்கின்றனர். இந்தக் கூட்டத்தின் நடுவே 80 வயது முதியவர் ஒருவர் கையில் `கருணாநிதி' பெயரை பச்சைக் குத்திக்கொண்டு கவலைதோய்ந்த முகத்துடன் காட்சியளிக்கிறார். அவர் பெயர் சடையப்பன். ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அவர், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் காவேரியில் தவமாய் கிடக்கிறார்.

`கலைஞர் உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார்' என்ற அவரது பேச்சில் கம்பீரமான உறுதி வெளிப்படுகிறது. அவருடன் பேசுகையில், `கருணாநிதியைச் சந்தித்துள்ளேன். அவரது பெயரை என் கையில் அவரது பெயரை பச்சைக் குத்தியுள்ளேன். கருணாநிதியைச் சந்தித்தபோது அவர் என்னிடம், `என் பெயரை எதற்குப் பச்சைக் குத்திருக்க’ என்று கேட்டார். அதற்கு என் பிள்ளைகள் உங்களால்தான் ஆசிரியர் பணியைப் பெற்றனர். அதனால், நான் சாப்பிடும்போது உங்களை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கையில் பச்சைக் குத்தியுள்ளேன்' என்று அவர் கூறி முடித்ததும் கண்களில் நீர் வழிந்தது. தொடர்ந்து பேசிய அவர். `கருணாநிதி விரைவில் குணம் பெறுவார்' என்றார் உறுதியுடன்.