உணவுப்பொருள்கள் வீணாவதைத் தடுக்க நெல்லையில் செயல்பாட்டுக்கு வந்த நவீன திட்டம்!

நெல்லை மாநகரப் பகுதியில் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்கும் வகையில், `உணவுக் கழிவு இல்லை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழாக்கள், வீட்டு சுப நிகழ்ச்சிகளின்போது வீணாகும் உணவை சேகரித்து உரியவர்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

உணவுப் பொருட்கள் - நவீன திட்டம்

நெல்லை மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக `உணவுக் கழிவு இல்லை’ என்கிற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, வீணாகும் உணவுப் பொருள்களைச் சேகரித்து உதவி தேவைப்படும் நபர்களுக்கு வழங்க உள்ளனர். நெல்லை மாநகரப் பகுதிகளில் நடக்கும் திருமணம், கோயில் விழா உள்ளிட்ட நிகழ்ச்சியின்போது, ஏராளமான உணவு மீதமாகிறது. 

அத்தகைய உணவுப் பொருள்களைச் சேகரித்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் வகையில் உணவுக் கழிவு இல்லை என்ற திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக ஒரு வாகனம் தயார் நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விழாக் காலங்களில் உணவு வீணாவதாகத் தகவல் கொடுத்தால் இந்த வாகனத்தில் சென்று அதைச் சேகரித்து அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், ``உணவு வீணாவதைத் தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 9087790877 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவித்தால் உடனடியாக வந்து உணவுகளை எடுத்துச் சென்றுவிடுவார்கள். முதல் கட்டமாக நெல்லை மாநகராட்சிப் பகுதியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

பொது மக்களிடம் இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தத் திட்டத்தை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``வீடுகளில் வைத்து பிரசவம் பார்ப்பதன் மூலம் தாய் சேய் இறப்பு ஏற்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம். அதனால் யாரும் வீடுகளில் வைத்து தாங்களாகவே பிரசவம் பார்க்கக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் பிரசவம் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் கிராம செவிலியர்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!