வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (07/08/2018)

கடைசி தொடர்பு:17:55 (07/08/2018)

பாப்பாள் சமைத்த சத்துணவில் பல்லி..? - பள்ளியைவிட்டு விரட்ட நடக்கும் சதியா?

சமையலர் பாப்பாள்

ரசுப் பள்ளி சமையலர் பாப்பாள் விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால், கவலையில் ஆழ்ந்துள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள். `அவர் சமைத்த சமையலில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததாகக் கூறி, அவரைப் பள்ளியைவிட்டு விரட்டும் வேலைகள் நடக்கின்றன' எனவும் குமுறுகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில், சத்துணவு சமையலராகப் பணிமாறுதல்பெற்று வந்தார் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்பவர். ' அவர் சமையல் பணியில் ஈடுபடக் கூடாது' எனக் கூறி, மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் பள்ளிக்கூடத்தைப் பூட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார் பாப்பாள். அதன் அடிப்படையில், சமையலர் பாப்பாளை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் பாப்பாள்அப்பகுதியைச் சேர்ந்த 89 பேர்மீது காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தற்போது வரை எட்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிந்துவருகிறார் பாப்பாள். இதனால், தங்களது குடும்பத்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தார் அவரது கணவர். 

இந்நிலையில், இன்று மதியம் வழக்கம்போல அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது. அப்போது, ஒரு மாணவியின் சாப்பாட்டுத் தட்டில் இறந்துபோன பல்லி ஒன்று கிடந்ததாகத் தகவல் பரவியது.  அதையடுத்து, பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் அனைவரையும் அவசரம் அவசரமாக அவிநாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு, 11 மாணவிகள் மற்றும் 1 மாணவர் உட்பட மொத்தம் 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் நந்தகோபால், " சமையலர் பாப்பாளை எப்படியாவது அந்தப் பள்ளியை விட்டு துரத்தியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். இதற்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட பலரும் துணையாக இருக்கிறார்கள். மாணவர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளோம். சமையலர் பாப்பாளுக்கு தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இத்தகைய சூழலில், பாப்பாளுக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுதிரள வேண்டும்" என்றார்.