வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/08/2018)

கடைசி தொடர்பு:18:44 (07/08/2018)

டாஸ்மாக் கடைகள் மூடல்; சினிமா காட்சிகள் ரத்து! - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இன்று மாலை முதல் நாளை வரை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதி


தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 28-ம் தேதி திடீர் ரத்தஅழுத்தம் காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். காவேரி மருத்துவமனை சார்பில், அவ்வப்போது கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அறிவிப்பை வெளியிட்டுவருகிறது. இந்நிலையில் இன்று, காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. 

இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளும் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன. இதனால், நாளையும் நாளை மறுநாளும் நடக்க இருந்த தமிழக அரசு நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்படுகின்றன. கோயம்பேடு சந்தை மூடப்படும் என்றும், நாளை காய்கறிகள், பழங்கள் விற்பனை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்து சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளும் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன.