கலைஞர் கருணாநிதியை இழந்தது தமிழகம்!

கலைஞர் கருணாநிதியை இழந்தது தமிழகம்!

 

 

``இதயத்தைத் தந்திடண்ணா... அதை நான் கையோடு கொண்டுவந்து கால் மலரில் வைப்பேன் அண்ணா'' என 1969-ல் அண்ணாவின் மறைவின்போது அழுதுகொண்டே அறிவித்த கருணாநிதி, அந்த முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றத் தயாராகிவிட்டார்.

தி.மு.க தலைவராகக் கலைஞர் பொறுப்பேற்ற பொன்விழா தருணம், அவருடைய தொண்டர்களுக்கு புண்ணாக்கும் தருணமாகியிருக்கிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலைஞரின் உடல்நிலை ஜூலை 29-ம் தேதி இரவு மோசமடைந்தது. இன்று மாலை (07.08.2018) 6.10 மணியளவில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்துவிட்டதாகக் காவேரி மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது. 

14 வயதில் மாணவப் பருவத்தில், முரசொலியைத் துண்டுப்பிரசுரமாக வெளியிட்ட நாளிலிருந்து ஏறத்தாழ 80 ஆண்டுகளாக சமூகப் பங்காற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகள், தி.மு.க தலைவராக 50 ஆண்டுகள், 12 முறை சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்தவர், ஐந்து முறை முதல்வர் என அவருடையை நெடிய பணிகளைப் பட்டியல் இடலாம்.

பத்திரிகையாளராகத் தொண்டர்களுக்குத் தினமும் கடிதங்கள், கேள்வி-பதில்கள் நிறைய எழுதியவர். மேடைகளில் சூறாவளியாக நிறைய பேசியவர். 74 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு, தொல்காப்பியத்துக்கு உரை, திருக்குறளுக்கு உரை, சிலப்பதிகாரத்தை நாடகமாகவும் சினிமாவாகவும் அரங்கேற்றியது, நாடகங்களில் நடித்தது என வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். குடிசை மாற்று வாரியம், கைரிக்‌ஷா ஒழிப்பு, கண்ணொளி வழங்கும் திட்டம், தமிழகப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கியது, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கியது, மாவட்டம்தோறும் ஆரம்ப சுகாதாரம், மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, சமத்துவபுரம், உழவர் சந்தை போன்றவற்றை உருவாக்கியது என அவருடைய சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தது உட்பட, அவருடைய பங்களிப்பு தமிழருக்கானது.

முதல்வராக இருந்த காலங்களிலும் அவருடைய இல்லத்துக்குப் போன் செய்தால், அவரே எடுத்துப் பேசும் தன்மை உடையவர். பத்திரிகையாளர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் பண்பாளர். கடந்த 60 ஆண்டுகளில் அவரைப் பற்றிய செய்தி இல்லாமல் தமிழில் பத்திரிகைகள் வெளிவந்ததில்லை. 

உலகத் தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!