LIVE: சி.ஐ.டி காலணியில் கருணாநிதியின் உடல்..! தொண்டர்கள் குவிந்ததால் போலீஸார் திணறல் #RIPKarunanidhi

சி.ஐ.டி காலணியில் கருணாநிதியின் உடல்!

கோபாலபுரத்திலிருந்து மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிய்யின் உடல் சி.ஐ.டி காலணியிலுள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கேயும் ஏராளமான தொண்டர்கள் கூடியுள்ளனர். அவர்களைக் காவல்துறையினர் கட்டுப்படுத்திவருகின்றனர். சி.ஐ.டி காலணியில் உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். காலை, 4 மணி வரை சி.ஐ.டி காலணியில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு!  

கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கில் காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு தமிழக அரசு மனுத் தாக்கல் செய்த பின்னர், அதனை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறியதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும் கருணாநிதி உடல்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் அஞ்சலிக்குப் பின்னர் அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

தி.மு.க தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அவசர வழக்காக விசாரித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க காலை 8 மணி வரை அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர். 

"ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா' என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?" - மு.க.ஸ்டாலின் உருக்கமான கவிதை

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, அவரது மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான கவிதை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

stalin letter

எங்கு சென்றாலும் சொல்லி விட்டுச் செல்லும்
எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன்
சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில், என் உடலில் ரத்தத்தில்,
சிந்தனையில் இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட
தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே
ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு 
கொண்டிருக்கிறான்" என்று நினைவிடத்தில் எழுத 
வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே
எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக 
இடையறாது உழைத்தது போதும் என்ற மன நிறைவுடன்
புறப்ப்பட்டு விட்டீர்களா?

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்
சளைக்காமல் ஓடி, "நாம் தாண்ட வேண்டிய உயரத்தை
யார் தாண்டுவார்கள் பார்ப்போம்' என்று போட்டி 
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வதுபிறந்தநாளாம்
சூன் 3ஆம் நாள் நான் பேசும்போது, 'உங்கள்
சக்தியில் பாதியைத் தாருங்கள்'என்றேன். அந்த சக்தியையும்,
பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன்.
தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத 
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும்
வென்று காட்டுவோம்.

கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்.... ஒரே ஒரு முறை...
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...!"
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!

"அப்பா அப்பா" என்பதை விட, "தலைவரே தலைவரே"
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒருமுறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?

கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின்

 

 

கருணாநிதி மரணம்... இரு நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது பீகார் அரசு!

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இதேபோல் மத்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்த 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது பீகார் மாநில அரசு. இரு நாட்கள் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு பீகார் மாநிலம் துக்கம் அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் இடம் கோரி தி.மு.க. மனு... தொடங்கியது வழக்கு விசாரணை!

தி.மு.க. தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு  தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியது தி.மு.க. இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க தி.மு.க. கோரியதையடுத்து, நீதிபதிஹூலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பட்டியல் இடப்பட்ட மனு ,வழக்கு ஆவணங்களுடன் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் ,நீதிபதி வீட்டிற்குள் சென்றார். 
தலைமை நீதிபதி வீட்டிற்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் பலருக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையில் கோபாலபுரம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி, இன்று மாலை வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இவரது உடல் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், சிஐடி காலனி இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அதிகாலை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அஞ்சலிக்கு நாளை காலை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து முற்றுகையிட்டுள்ளனர்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இரவு 1 மணிக்குள் கோபாலபுரம் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை முடித்து, சிஐடி காலனி இல்லத்துக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் கோபாலபுரம் இல்லத்தை கண்ணீரோடு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நலிவுற்று இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்கள் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது சென்னை வந்தார். கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவர், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் கருணாநிதியின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினர்.

மெரினாவில் இடம் கிடைக்குமா? சற்று நேரத்தில் துவங்குகிறது விசாரணை!

தி.மு.க. தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனு மீதான விசராணை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஸ் முன்னிலையில் அவரது இல்லத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி, தி.மு.க. மனுத்தாக்கல் செய்ததையடுத்து தலைமை வழக்கறிஞர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். இன்னும் சற்று நேரத்தில் வழக்கு விசாரணை துவங்க உள்ளது.

தொண்டர்கள் புடைசூழ கோபாலபுரம் இல்லத்தை அடைந்தது கருணாநிதியின் உடல்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இதையடுத்து இன்று இரவு 9 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் நோக்கி கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் கதறி அழுதபடி, கருணாநிதியின் உடலோடு கோபாலபுரம் நோக்கி அணிவகுத்தனர். ஆம்புலன்ஸ்க்கு முன்னால் மு.க.ஸ்டாலின் தனது காரில் பயணித்தார்.

திரளான தொண்டர்களுக்கு மத்தியில் மெதுவாக ஊர்ந்து சென்ற ஆம்புலன்ஸ்,1.30 மணி நேரத்துக்குப் பின்னர் தற்போது கோபாலபுரம் இல்லத்தை வந்தடைந்தது. தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தை சூழ்ந்து கொள்ள... கருணாநிதியின் உடல் வீட்டினுள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கருணாநிதியின் உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அஞ்சலி மற்றும் இறுதி மரியாதை நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து, அங்கிருந்து நாளை அதிகாலை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி இல்லத்துக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்படுகிறது.

மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்பு... தமிழக அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது!

தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய விரும்பிய நிலையில், தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என அரசியல் கட்சித்தலைவர்கள் அ.தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நடிகர் ரஜினிகாந்த் என பலரும் தொடர்ச்சியாக மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்திட இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். "ஜெயலலிதாவுக்கு இடம் வழங்கியதை போல் கலைஞருக்கும் மெரினாவில் இடம் தரவேண்டும்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். "கலைஞர் அவர்களை, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை," என நடிகர் ரஜினிகாந்த்தும் தெரிவித்துள்ளனர். இதேபோல் பா.ம.க.ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்...

முதுபெரும் அரசியல் தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மத்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. மேலும் நாடு முழுவதும் நாளை தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மெரினாவில் இடம் ஒதுக்காதது அரசியல் காழ்ப்புணர்ச்சியே... எதிர்கட்சிகள் காட்டம் !

80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை; 5 முறை முதல்வர்; 13 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என தமிழக அரசியலில் அழுத்தம் திருத்தமாக முத்திரைப்பதித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த கருணாநிதியின் உடல் அடக்கம் செய்திட, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானது என பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு, மெரினா கடற்கரையில் இடம் தர தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும் என்றும், இப்பிரச்சனையில் அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மெரினாவில் இடம் கோரி தி.மு.க. மனு... இன்று இரவே விசாரிக்கிறது நீதிமன்றம் :

மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் முன்பு திமுக வழக்கறிஞர் வில்சன் மனுத்தாக்கல் செய்துள்ளார். நீதிபதி வீட்டிற்கு சென்று மனுத்தாக்கல் செய்துள்ள தி.மு.க., உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. தி.மு.க.வின் இந்த மனு மீது இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் இடம் மறுப்பு ; இறந்தும் போராடும் கருணாநிதி :

80 ஆண்டு அரசியல் வாழ்க்கையைக் கொண்ட கருணாநிதி, தனது அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களை கண்டவர். உடல்நலக்குறைவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராடியவர், இன்று மாலை தன் முடிவை எய்தினார். இந்நிலையில் உயிரிழந்த பின்னர் தற்போது அண்ணா நினைவிடம் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்துக்காக இறந்தும் போராடி வருகிறார் கருணாநிதி. 

கோபாலபுரம் நோக்கி புறப்பட்டது கருணாநிதி உடல் :

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல், காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு தற்போது கொண்டு செல்லப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு முன்னால் மு.க.ஸ்டாலின் காரில் செல்கிறார்.

கோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1.00 மணி வரையில் உறவினர்களால் இறுதி மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெரினாவில் இடம் மறுப்பு : வலுக்கிறது அரசியல் சர்ச்சை !

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பினார். அவர் போலவே தி.மு.க.வினரும், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டச் சிக்கல்கள் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என அரசுத்தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மெரினாவில் இடம் ஒதுக்காதது தற்போது புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய நிலையில், தற்போது கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்காதது ஏன் என்ற கேள்வியையும் தி.மு.க.வினர் எழுப்பி வருகின்றனர். முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுவதற்கு, 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது' என்று எங்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை கொண்ட தலைவர் என்ற தார்மிக அடிப்படையில் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கலாம் என்றும் தி.மு.க.வினர் கோரி வருகின்றனர். நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை என்றும் தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.

"தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில், முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் மறைந்தபோது, மூவருக்கும் நினைவிடம் கட்டிப் போற்றிய அரசியல் பண்பாடு கொண்டவராக கருணாநிதி இருந்திருக்கிறார். காமராஜர் இறந்தபோது, அவரது நினைவைப் போற்றும் வகையில் தி.மு.க. கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடச் சொன்னார்; 'தமிழினத்தலைவர் காமராஜர் மறைந்தார்' என தி.மு.க. பத்திரிகைகள் செய்தி வெளியிட காரணமாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது சரியானது அல்ல. அவரிடம் இருந்த அரசியல் பண்பாடு தற்போது ஆட்சியில் உள்ளவர்களிடம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது," எனவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்காததைக் கண்டித்து, தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவேரி மருத்துவமனை அருகே சாலை தடுப்புகளை உடைத்து தி.மு.க.வினர் ஆவேசமாகப் போராடி வருகின்றனர். இதற்கிடையே, கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி நீதிமன்றத்தை நாட தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர்.

கோபாலபுரம், சிஐடி காலனி இல்லத்தில் இன்று இரவு இறுதி மரியாதை

காவேரி மருத்துவமனையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்கு கருணாநிதியின் உடல் வைக்கப்படுகிறது. அதன்பின்னர் அதிகாலை கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், "உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல்
நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதிவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழகத்தினரும், பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்," என அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது... தி.மு.க. கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய தி.மு.க. அனுமதி கோரியிருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் நேரில் சந்தித்த்து கோரினர். மேலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், "கலைஞர் உடலை அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான் தலைவரின் விருப்பமும், தி.மு.க.வினர் அனைவரின் விருப்பமும். இதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற நாங்கள் மற்றும் தலைவர் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தோம். அவர்கள் 'பார்ப்போம்' என அவரிடம் பேசி அனுப்பி விட்டார்கள். மீண்டும் முறைப்படி கேட்கவேண்டும் என்றும் செயல் தலைவர் கையொப்பமிட்டு முதல்வருக்கு வேண்டுகோள் மனுவை நானும், பொன்முடி, நேரு ஆகியோர் சென்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமையைச் சந்தித்து தளபதி சார்பில் மனுவை அளித்தோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். முழுமையான பதிலை தரவில்லை. எதிர்பார்த்திருக்கிறோம்," எனத் தெரிவித்திருந்தார்.

அரசு அறிவிப்பு

இந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்," எனத் தெரிவித்துள்ளார். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது தற்போதைய சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது கலைஞர் உடல்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து சிறிது நேரத்தில் அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்துக்கும் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து நாளை காலை 11.00 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாளை சென்னை வருகிறார்கள்.

 

கதறி அழும் தொண்டர்கள் :

கருணாநிதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கதறி அழுதனர். இந்த அறிவிப்பையடுத்து கோபாலபுரம் கலைஞர்கள் இல்லத்தில் தொண்டர்கள் பெருமளவில் திரளத்துவங்க, வழியெங்கும் பேரிகார்ட்களை அமைத்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

7 நாள் துக்கம் அனுசரிப்பு. நாளை அரசு விடுமுறை :

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் இரங்கல் :

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதி மறைவுக்கு அவர் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் "கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். `கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரின் குடும்பத்தாருக்கும் மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மறைந்தார் :

80  ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் எனப் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து 95வது வயதில் இன்று மறைந்திருக்கிறார். இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல்துறை வல்லமை கொண்ட தலைவர் எனக் கடந்த நூற்றாண்டில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக, மக்கள் மத்தியில் மாபெரும் சக்தி பெற்றத் தலைவராக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாகக் காவேரி மருத்துவமனை தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதி

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கருணாநிதி ஓய்வில் இருந்துவந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்களால் அவருக்கு கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே அவர், காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை 7 அறிக்கைகள் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், கருணாநிதி உயிரிழந்துவிட்டதாகக் காவேரி மருத்துவமனை தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், உடல்நிலை ஒத்துழைக்காததால் இன்று (7.8.2018) மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர் பிரிந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை இழந்துவிட்டோம். உலகத் தமிழர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!