தமிழகமும் நோ, டெல்லியும் நோ - நீடிக்கும் சிக்கல்!

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் பிரச்னை வெடித்துள்ளது. கடந்த 12மணி நேரமாகத் தொடர்ந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.


தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28-ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்தநிலையில், இன்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்தவற்கான பணியில் தி.மு.க-வினர் ஈடுபட்டுவந்தனர். கருணாநிதியின் உடலை இராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக ரூட் மேப் போடப்பட்டு காவல் துறையினருடன் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தந்தது. அடுத்தகட்டமாக, அடக்கம்செய்வதில் பிரச்னை ஆரம்பித்தது. மெரினாவில் கருணாநிதியை அடக்கம்செய்வது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வைச்சேர்ந்த மூத்த தலைவர்கள், தமிழக முதல்வரை காலையில் சந்தித்துப் பேசினர்.  ஆனால், இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்கிறேன் எனத் தெரிவித்தார்.

மெரினா

மேலும், இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் சிலரை அழைத்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அமைச்சர்கள், `கருணாநிதி முன்னாள் முதல்வர் என்பதால், அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது. கிண்டி காந்தி மண்டபம் அருகே முன்னாள் முதல்வர் காமராஜர், பக்தவச்சலம் அடக்கம் செய்யப்பட்ட ஏரியாவில் அடக்கம் செய்யலாம் என ஆலோசனை தெரிவித்தனர். மூத்த அமைச்சர் ஒருவர், `எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு இடம் வழங்கினால், உங்களுக்கு அது கெட்டபெயரை ஏற்படுத்தும்' என்று தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு கைவிரித்த நிலையில் மத்திய அரசை நாடியுள்ளனர் தி.மு.க-வினர். அப்போது, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இது, மாநில அரசின் முடிவு என மத்திய அரசும் கைவிரித்துவிட்டது. இதனால், கடந்த 12 மணி நேரமாக மெரினாவில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வழக்குகள் இருப்பதால் மெரினாவில் இடமளிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க-வினர் காவேரி மருத்துவமனை வாசலில் அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிவருகின்றனர். மேலும், மருத்துவமனை முன்பாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்து, தொண்டர்கள் ஆவேசமாகக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!