'மெரினா வேண்டும்... மெரினா வேண்டும்!' - தொண்டர்கள் தொடர் கோஷம் #karunanidhi

'மெரினா வேண்டும்... மெரினா வேண்டும்...' என கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தொண்டர்கள் கோஷம் எழுப்பிவருகிறார்கள்.
 

காவேரி மருத்துவமனை

 கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்வதாக முதல்வர் பதிலளித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் காமராஜர் நினைவிடம் அருகே, அண்ணா பல்கலைக்கழகம் எதிரே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாதாகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பாகக் கூடியிருக்கும் தொண்டர்கள், தொடர் கோஷமிட்டுவருகின்றனர். அவர்கள், 'மெரினா வேண்டும்... மெரினா வேண்டும்...' என்று கோஷங்களை எழுப்பிவருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்தும் தொண்டர்கள் ஆவேசமாகக் கோஷங்களை எழுப்பினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தொண்டர்களை லேசான தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்கவேண்டி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கூடியுள்ள தொண்டர்கள், கையில் கறுப்புக்கொடியுடன் திரண்டிருக்கின்றனர்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!