`மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனு #karunanidhi

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனுத்தாக்கல் செய்துள்ளது.

உயர் நீதிமன்றம்

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, மாலை 6.10 மணியளவில் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, காமராஜர் நினைவிடம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார் என அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தி.மு.க தொண்டர்கள் ஈடுபட்டுவருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை உடைத்துத் தொண்டர்கள் அரசுக்கு எதிராக ஆவேசமாகக் கோஷமிட்டனர். மேலும், கோபாலபுரம் இல்லத்தின் முன்பு குவிந்துள்ள தொண்டர்கள், `மெரினா வேண்டும்... மெரினா வேண்டும்...’ என்று கோஷங்களை எழுப்பிவருகின்றனர். 

இந்த நிலையில், கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷிடம் தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனு, இரவு 10.30 மணிக்கு விசாரிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!