வெளியிடப்பட்ட நேரம்: 23:06 (07/08/2018)

கடைசி தொடர்பு:23:06 (07/08/2018)

'மெரினா வேண்டும்’ - கருணாநிதிக்காக ஒலிக்கும் குரல்கள்..! மாவட்டங்களின் கள நிலவரம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கித் தராத மாநில அரசைக் கண்டித்தும், உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், கோவை துடியலூர் பகுதியில் தி.மு.கவினர் 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்கள், மறியல்செய்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இரா.குருபிரசாத்

மறைந்த தி.மு.க தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க-வினர் சேலம் அண்ணா சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் பல பகுதிகளில் கருணாநிதியின் திருஉருவப் படங்கள் வைக்கப்பட்டு, தி.மு.க-வினர் மரியாதைசெய்து வருகிறார்கள்.

வி.கே.ரமேஷ்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் தமிழக அரசு இடம் ஒதுக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தி.மு.க - வினர் ஊர்வலம் சென்றதோடு, கடைகளை அடைக்கக் கோரியும் கோஷம் எழுப்பினர். போலீஸ் பாதுகாப்பு குறைவால் வியாபாரிகள் பதட்டமடைந்தனர். 

இரா.மோகன், படம்:உ.பாண்டி

திருவள்ளூரில், பல்வேறு பகுதிகளில் தி.மு.க கொடி அரைக்கம்பத்தில்  பறக்கவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகரில் சில இடங்களில் கருணாநிதி படத்துக்கு மாலை போட்டு மெழுகுவத்தி ஏற்றியுள்ளனர். திருவள்ளூர் அருகே கொழுந்தலூர் என்ற இடத்தில் டி.20 என்ற பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. 

ரா.தேவேந்திரன் 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எந்தப் பேருந்தும் ஓடவில்லை. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.  அதேபோல, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்காததைக் கண்டித்து, செஞ்சி நான்குமுனை சந்திப்பிலும் தி.மு.க-வினர் சாலை மறியிலில் ஈடுபட்டுவருகின்றனர். 

ஜெ.முருகன்

மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் தராதகைக் கண்டித்து, ராணிப்பேட்டையில் தி.மு.க-வினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். ஆம்பூர் அருகே, அரசுப் பேருந்துமீது கல்வீசியதில் கண்ணாடி உடைந்து ஒட்டுநர் காயமடைந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரைஅடுத்த சோலூர்  தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் படுகாயமடைந்தார். 

கா.முரளி

தேனியின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். குறிப்பாக, நேரு சிலை அருகே அதிக அளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேனியின் மிக முக்கிய பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால், திறந்துள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. போடியில், கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எம்.கணேஷ்

தி.மு.க தலைவர் கலைஞர் மறைவையொட்டி ஈரோடு புத்தகத் திருவிழா இரண்டு நாள்கள் மூடப்படுகிறது. இன்றும் நாளையும் புத்தகத் திருவிழா நடைபெறாது என புத்தகத் திருவிழாவை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது. 

நவீன் இளங்கோவன்

சிவகங்கையில், எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சிவகங்கை பஸ் நிலையம் அருகே தி.மு.க-வினர் மெழுகுவத்தி ஏந்தியும், கலைஞர் முகமூடி அணிந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தெ.பாலமுருகன்


திருச்சி பெரியகடை வீதி, மலைக்கோட்டை, சத்திரம், திருச்சி ஜங்ஷன் போன்ற வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தகவல் பரவியதையடுத்து, குடிமகன்கள் மதுபானக் கடைகளுக்குப் படையெடுத்தார்கள். இதன் விளைவாகப் பல இடங்களில் 70 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து மது பாட்டில்கள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், பல இடங்களில் தள்ளுமுல்லு ஏற்பட்டது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் ஆறு மணிக்கு மேல் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டு, மறைவாக சரக்கு விற்பனைசெய்யப்பட்டது. அவர்களைக் காவல்துறையினர் விரட்டியடித்தனர். 

சி.ய.ஆனந்தகுமார்

மெரினாவில் இடம் கேட்டு கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல இடங்களில் சாலையோர மரங்களை வெட்டிச் சாய்த்தனர். சாலைகளில் டயர்களைக் கொளுத்தியும் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எம்.வடிவேல்