வெளியிடப்பட்ட நேரம்: 00:04 (08/08/2018)

கடைசி தொடர்பு:00:04 (08/08/2018)

மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்..! கருணாநிதிக்காக ஒலிக்கும் தலைவர்களின் குரல்கள்

மறைந்த தி.மு.க தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். 

கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைபாடு காரணமாக,  கடந்த மாதம் 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை 6.10 மணி காலமானார். அதையடுத்து, அவரது உடலை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்வதற்கு தி.மு.க சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தது. அதையடுத்து, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.  

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், 'ஜெயலலிதாவைப் போலவே, தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கித் தரவேண்டும். இந்த துக்கமான நேரத்தில், தற்போதைய தமிழ்நாடு தலைவர்கள் பெருந்தன்மையுடன் அவருக்கு இடம் ஒதுக்கித் தருவார்கள் என்று நான் நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில், 'மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதுதான், நாம் அந்த மாமனிதருக்குக் கொடுக்கும் தகுந்த மரியாதை' என்று பதிவிட்டுள்ளார். 

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் உடலை அடக்கம்செய்ய, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் எந்த வகையிலும் அரசியல் செய்யக் கூடாது. மெரினா கடற்கரையில் தலைவர்கள் உடலை நல்லடக்கம் செய்வதற்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் மெரினா கடற்கரையில் கலைஞர் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க இயலவில்லை என்று அரசு கூறியிருக்கும் விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை. ஜெயலலிதா இறந்தபோது, இத்தகைய வழக்குகள் நிலுவையில் இருந்தன. எனவே, இந்த  விஷயத்தில் தேவையில்லாத அரசியல் செய்யாமல், சென்னை மெரினா கடற்கரையில்  கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கையில், 'அண்ணா நினைவிடத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் என்ன சட்டச்சிக்கல் உள்ளது. அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் தர வேண்டும்' என்று தெரிவித்தார். 

நடிகர் சித்தார்த் ட்விட்டர் பதிவில், 'காமராஜருக்கு மெரினாவில் இடம் ஏன் ஒதுக்கவில்லை என்று பேசுவது தேவையற்றது. கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.