வெளியிடப்பட்ட நேரம்: 23:47 (07/08/2018)

கடைசி தொடர்பு:23:59 (07/08/2018)

‘மெரினாவில் இடம் ஒதுக்க எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அதிகாரம்!’ - தகிக்கும் தமிழிசை

அண்ணா சமாதியில், காலமான கருணாநிதிக்கு நல்லடக்கம் செய்ய இடம் வழங்க மறுப்பதைக் கண்டித்து, ஆளும் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றனர் தி.மு.க தொண்டர்கள். அனுமதி மறுப்பில் மத்திய பி.ஜே.பி அரசுக்கு என்ன பங்கிருக்கிறது என தமிழிசை செளந்தர்ராஜனிடம் விசாரித்தால்,  ‘சமாதி அனுமதி விவகாரத்தில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்குத்தான் முழு அதிகாரம்’ என்கிறார். 

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடல்
 

தீவிர உடல்நலக்குறைவால், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, சிகிச்சை பலனளிக்காமல் ஆகஸ்ட் 7-ந் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரின் உடலை அண்ணா சமாதியிலேயே நல்லடக்கம் செய்ய இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சரை அவருடைய இல்லத்திலேயே சந்தித்துப் பேசினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். அந்த நேரத்தில், ‘எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்’ எனக் கூறிய முதல்வர் தரப்பினர், அடுத்து சில மணி நேரங்களில், அண்ணா சமாதியில் இடம் அளிக்க மறுத்துவிட்டனர். இதனால், தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது தி.மு.க. 

தமிழிசைஇதுகுறித்துப் பேசும் தி.மு.க நிர்வாகிகள், “மத்திய பா.ஜ.க அரசின் தூண்டுதலில்தான் தமிழக அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது. தமிழகத்தில் தங்களுக்குச் சாதகமாக சில அரசியல் விஷயங்களை முன்னெடுக்க விரும்புகிறது பா.ஜ.க தலைமை. அதற்கு, ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தச் சிக்னலும் கொடுக்கப்படவில்லை. அதன் விளைவாக, சமாதியை முன்வைத்து அரசியலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு, எடப்பாடி பழனிசாமியும் துணை போகிறார். ஐந்து முறை தமிழக முதல்வராகவும் உலகத் தமிழர்களின் மனங்களில் எல்லாம் நிறைந்திருக்கிறார் கருணாநிதி. அவரை முன்வைத்து அரசியல் ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது”என்றார் வேதனையோடு. 

தி.மு.க-வினரின் கொந்தளிப்புகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம். “எங்களுடைய பங்கு என்று இதில் எதுவும் இல்லை. இது மிகவும் தவறான தகவல். ‘மேலிடத்தில் இருந்து சொன்னால் அனுமதி கிடைக்கும்’ என்பதை ஏற்க முடியவில்லை. இது, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரம். மத்திய அரசு ஒருநாள் துக்கம் அனுஷ்டித்து தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுகிறது, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவிருக்கிறார். இதெல்லாம்தான் மத்திய அரசு செய்யக்கூடிய விஷயங்கள். இதுதொடர்பாக வழக்கு ஒன்றும் நடந்துவருகிறது. சமாதிக்கு இடம் அளிக்க வேண்டிய பொறுப்பில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கின்றனர். எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை!” என்றார் உறுதியாக.