வெளியிடப்பட்ட நேரம்: 23:53 (07/08/2018)

கடைசி தொடர்பு:23:53 (07/08/2018)

'ஒரு முறையாவது கலைஞரை பக்கத்தில் இருந்து பார்த்திடணும்!' - கோபாலபுரத்தில் நடந்த பத்து நிமிட பரபரப்பு

கருணாநிதி

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்தார். அவர் மறைவுச் செய்தி வெளியானதிலிருந்து தி.மு.க தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்துக்குப் புறப்பட்டது. இந்த இரண்டு பகுதிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் இடைவெளி. ஆனால், மக்கள் மற்றும் தொண்டர்கள் வெள்ளத்துக்கு இடையே ஆம்புலன்ஸால் மெல்ல ஊர்ந்தவாறேதான் வரமுடிந்தது. சுமார் இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு, ஆம்புலன்ஸ் கோபாலபுரம் இல்லத்தை வந்தடைந்தது.

கோபாலபுரம்

மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு வரவிருக்கும் தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் கூட்டம் பெருமளவில் கூடியது. அந்தப் பகுதியிலுள்ள மரங்கள், பால்கனிகள், பெருமாள் கோயிலின் மதில் சுவர் மற்றும் கோபுரத்தின் மீது ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். ஆம்புலன்ஸூக்கு முன்பும், பின்பும் வந்த தொண்டர்களுடன், அந்தப் பகுதியில் காத்திருந்த தொண்டர்களும் ஆம்புலன்ஸை சூழந்துகொண்டனர். இதனால் கருணாநிதியின் பூத உடலை வெளியே எடுக்கக் காவல்துறையினர் கடும் சிரமப்பட்டனர். முதலில் ஆன்புலன்ஸின் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டது. உடனே தொண்டர்கள் பலரும் ஆம்புலன்ஸையும், கண்ணாடிப் பேழையையும் தொட்டு வணங்க ஆரம்பித்தனர். 'ஒரு முறையாவது கலைஞரை பக்கத்தில் இருந்து பார்த்திடணும்' என்று என்ற எண்ணத்தில் ஆம்புலன்ஸை சூழந்துகொண்டனர். இதனால் ஆம்புலன்ஸ் கதவுகள் மூடப்பட்டன. 

கருணாநிதி

பிறகு இரண்டாம் முயற்சியிலும் கருணாநிதியின் பூத உடலை எடுக்க முடியாமல் போலீஸார் திணறினர். இதனால் மூன்றாம் முயற்சியில் போலீஸார் லேசான தடியடி நடத்தினர். சுமார் பத்து நிமிட முயற்சிக்குப் பிறகு, ஆம்புலன்ஸில் இருந்து கருணாநிதியின் பூத உடல் வெளியே எடுக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட போலீஸார் பாதுகாப்பு அரணாக இருந்து, கருணாநிதியின் உடலை வீட்டினுள் கொண்டுசெல்ல உதவினர்.